தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக மாநில அளவில் 2022-23 ஆம் ஆண்டில் பாரம்பரிய நெல் இரகம் பயிரிட்டு முதல் மூன்று நிலையில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் சானிறிதழ் உள்ளடக்கிய பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது வழங்கப்பட உள்ளது.
இவ்விருதினை வழங்கிட குறைந்தபட்சம் 50 சென்ட் நிலப்பரப்பில் பாரம்பரிய நெல் பயிரிட்ட விவசாயிகளின் வயல்களில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்படும். இப்போட்டியில் கலந்து கொள்ள விவசாயிகள் ரூ.100/- பதிவு கட்டணமாக செலுத்தி சிட்டா/ அடங்கள் போன்ற விவரங்களுடன், அந்தந்த பகுதி வேளாண்மை விரிவாக்க மையங்களில் பதிவு செய்திட வேண்டும். போட்டிக்கான பதிவிற்கு பிறகு அறுவடை மேற்கொள்ளவிருக்கும் நிலத்தில் போட்டிக்கான விபரங்கள் கொண்ட பலகை வைக்க வேண்டும். வேளாண்மை இயக்குநரின் பிரதிநிதி, மாவட்ட ஆட்சியரின் பிரதிநிதி, செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், அங்கக வேளாண்மைத் துறையின் குழு உறுப்பினர், முன்னோடி விவசாயி ஆகியோரின் முன்னிலையில் பயிர் அறுவடை நடைபெறும்.
போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயி கடைபிடிக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் அறுவடைக்கு பிறகு தானியத்தின் மாதிரி, மகசூல் விவரங்கள் கூடிய ஆவணம் வேளாண் இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதில் மாநில அளவில் முதல் மூன்று நிலையில் உள்ள விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். எனவே பாரம்பரிய நெல் பயிரிடும் செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் அனைவரும், இப்போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை பெறுமாறு வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் எல்.சுரேஷ் கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க: