நடப்பாண்டில் தமிழ்நாட்டில் தென்னைப் பயிரிடும் விவசாமிகளின் நலனைக் காத்திடவும், பயறு வகை சாகுபடியினை ஊக்குவித்து, உற்பத்தியினை அதிகரித்திடவும் விலை ஆதரவு திட்டத்தில் கொப்பரைத் தேங்காய், உளுந்து மற்றும் பச்சைப் பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதுத்தொடர்பாக வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 4.577 இலட்சம் எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றது. தேங்காய்களை மதிப்புக்கூட்டி கொப்பரைகளாக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். சமீப காலமாக, கொப்பரைத் தேங்காய்களின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிக குறைவாக இருந்து வருகின்றது. இந்நிலையில் கொப்பரை கொள்முதல் கடந்தாண்டு எவ்வளவு செய்யப்பட்டது என்றும், நடப்பாண்டு இலக்கு என்ன என்பதையும் அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவற்றின் முழு விவரம்-
கடந்தாண்டு கொப்பரை கொள்முதல் விவரம்:
தமிழகத்திலுள்ள கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை, விருதுநகர், நாமக்கல், சிவகங்கை, வேலூர், இராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, தருமபுரி, திருவாரூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், மற்றும் மயிலாடுதுறை ஆகிய 26 மாவட்டங்களில் உள்ள 75 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் கடந்த ஆண்டில் 48,364 விவசாயிகளிடமிருந்து 79,021.80 மெ.டன் அரவை கொப்பரை ரூ.858.176 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஆதரவு விலை எவ்வளவு?
நடப்பாண்டு 2024-ல் பந்துக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.120.00-ம் மற்றும் அரவைக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.111.60-ம் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசினை வலியுறுத்தியதன் அடிப்படையில் 90,300 மெ.டன் என்ற அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு கொப்பரை கொள்முதலுக்கான அனுமதி ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெற்றுள்ளது. இத்திட்டம் 2024 நடப்பாண்டில் 14.03.2024 முதல் 10.06.2024 வரை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல்:
பயறு அறுவடை காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியினால் நியாயமான விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இத்தருணங்களில் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு ஆகியவற்றை விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசு கொள்முதல் செய்து வருகின்றது.
Read more: தமிழ்நாட்டில் புதியதாக 4 மாநகராட்சி- எல்லை எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
பயறு கொள்முதல்- விவரம் மாவட்டம் வாரியாக:
தமிழ்நாட்டில் 14.03.2024 முதல் 10.06.2024 வரை தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், விருதுநகர், இராமநாதபுரம், இராணிப்பேட்டை, தேனி, கரூர், செங்கல்பட்டு, திருப்பூர், சேலம், நாமக்கல் ஆகிய 17 மாவட்டங்களிலும்;
01.04.2024 முதல் 29.06.2024 வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களிலும் உள்ள 53 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் 1,42,780 மெட்ரிக்டன் உளுந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. உளுந்து கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.69.50 வழங்கப்படும்.
மேலும், பச்சைப்பயரானது 14.03.2023 முதல் 10.06.2024 வரை திருவள்ளூர் மாவட்டத்திலும், 01.04.2024 முதல் 29.06.2024 வரை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் உள்ள 11 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் 1,860 மெட்ரிக்டன் பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. பச்சைப்பயறு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.85.58 வழங்கப்படும்.
எனவே, தென்னை, உளுந்து, பச்சைப் பயறு பயிரிட்டுள்ள விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி தங்களது பெயர்களை உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து அதிக அளவில் பயன்பெறுமாறு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Read more:
இருக்கிற கொஞ்ச இடத்திலும் காட்டு நெல்லி- முள் சீத்தா என பயிரிட்டு கலக்கும் பிஸியோதெரபி மருத்துவர்!
இறைச்சிக்கு மாற்றாக தயார் நிலையில் பலாக் கறி: அசத்திய ICAR- IIHR விஞ்ஞானிகள்