தமிழ்நாட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நடைப்பெற்று வரும் நிலையில், கோவை மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது விளைப்பொருளை விற்பனை செய்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவைக்கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.111.60/-க்கும், பந்து கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.120/-க்கும் விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்திட அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கோவையில் 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்:
மேற்குறிப்பிட்ட அரசின் அனுமதிக்கிணங்க 2024 ஆம் ஆண்டிற்கு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் 14.03.2024 முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர், ஆனைமலை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு, காரமடை, செஞ்சேரி மலையடிப்பாளையம், சூலூர் மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக 31500 மெ.டன் அரவை கொப்பரையும், 800 மெ.டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேவைப்படும் ஆவணங்கள் விவரம்:
தென்னை விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், உற்பத்திசான்று ஆகிய ஆவணங்களுடன் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகலாம். வரும் 10.06.2024 உடன் கொப்பரை கொள்முதல் முடிவடைய உள்ளதால் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தாங்கள் உற்பத்தி செய்யும் கொப்பரையினை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விற்பனை செய்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி கேட்டுக் கொண்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கொப்பரை கொள்முதல் விவரம்:
தமிழகத்திலுள்ள கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை, விருதுநகர், நாமக்கல், சிவகங்கை, வேலூர், இராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, தருமபுரி, திருவாரூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், மற்றும் மயிலாடுதுறை ஆகிய 26 மாவட்டங்களில் உள்ள 75 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் கடந்த ஆண்டில் 48,364 விவசாயிகளிடமிருந்து 79,021.80 மெ.டன் அரவை கொப்பரை ரூ.858.176 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 4.577 இலட்சம் எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றது. தேங்காய்களை மதிப்புக்கூட்டி கொப்பரைகளாக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசினை வலியுறுத்தியதன் அடிப்படையில் நடப்பாண்டு தமிழகம் முழுவதும் 90,300 மெ.டன் என்ற அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு கொப்பரை கொள்முதலுக்கான அனுமதி ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more:
Red Alert: தமிழகத்திற்கு அடுத்தடுத்து ரெட் அலர்ட்- அதீத கனமழை பெய்யும் மாவட்டங்கள் எது?
வேளாண் துறையில் இயந்திரமயமாக்கல் அவசியம்- ACE அசோக் அனந்தராமன் !