நம் முன்னோர்கள் நிலப்பரப்பை ஆய்ந்து அறிந்து அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப ஐவகை நிலங்களாகப் பிரித்து சாகுபடி செய்து வந்தனர். மலையும் மலை சார்ந்த நிலம் ''குறிஞ்சி'' எனவும், காடும் காடு சார்ந்த நிலம் ''முல்லை'' எனவும், வயலும் வயல் சார்ந்த நிலம் ''மருதம்'' எனவும், கடலும் கடல் சார்ந்த நிலம் ''நெய்தல்'' எனவும், மணலும் மணல் சார்ந்த வறண்ட நிலம் ''பாலை'' எனவும் பிரித்து வகைப்படுத்தினர்.
நமது அரசாங்கங்கள் நிலத்தடி நீரின் இழப்பை குறித்து கவனம் செலுத்தும் அளவிற்கு, பயிர் வாரி முறை சாகுபடி குறித்து கவனமே செலுத்துவதில்லை. நம் முன்னோர்கள் கையாண்ட இயற்கை விவசாய முறைகளை மதிப்பதே இல்லை.
உதாரணமாக, தமிழக டெல்டா மாவட்டங்கள் நன்செய் பயிர் சாகுபடிக்கு ஏற்றவை. மத்திய தமிழகப் பகுதிகளான மணப்பாறை, துறையூர், அரியலூர், பெரம்பலூர், சின்னசேலம், ஆத்தூர், சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகள் முல்லை நிலத்துக்குரிய குணம் கொண்டவை. இங்குள்ள கிராமங்களில், சிறுதானியங்கள், காய்கறிகள், பூக்கள் போன்றவற்றை சாகுபடி செய்து லாபம் பார்க்கலாம்.
நஞ்சை நிலத்தில் நஞ்சை பயிர் செய்யணும், புஞ்சை நிலத்துல புஞ்சைப் பயிர் சாகுபடி செய்வதே பயிர்வாரி முறை. தமிழ் முன்னோர்களால் காலம் தொட்டு கடைப்பிடிக்கப்பட்ட இயற்கை வழிச் சாகுபடி முறையும் இதுதான். ஆறு, ஏரி, கண்மாய் மூலம் நல்ல நீர்ப்பாசன வசதியுள்ள நஞ்சை நிலத்தில், நெல், வாழை, கரும்பு பயிரிடலாம். இப்படி எந்தப் பாசன வசதியும் இல்லாத, வானம் பார்த்த பூமியான புஞ்சையில் அதே பயிர்களைப் போட்டால் தண்ணீர்த் தட்டுப்பாடு வரத்தானே செய்யும்.
பழங்கால விவாசய முறைகளை பின்பற்றியும் அதில் இக்கால தொழில்நுட்ப முறைகளை புகுத்தியும் பயிர்செய்துவந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இயற்கையோடு இணைந்த தொழில்நுட்பயுக்திகளை கையாள்வது மிக மிக தேவையான ஒன்றாகும்.
-
பூச்சி மேலாண்மை
-
ஊட்டச்சத்து மேலாண்மை.
-
இயந்திரவியல் மேலாண்மை
-
வறட்சி மேலாண்மை
மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு மேலாண்மை முறைகளையும் சரிவர புரிந்துகொண்டு விவசாயம் செய்துவந்தால் செழிப்பான பயிர் சாகுபடி செய்து அசத்தலாம்..
பூச்சி மேலாண்மை.
பூச்சிகள், புழுக்கள் ஆகியவை உழவனுக்கு தோழனாகவும் நிலதின் காவலனாகவும் பயிருக்கு உரமாகவும் விளங்குகின்றன. ஆனால், வேலியே பயிரை மேய்வது போல் மாறுவதும் உண்டு. பூச்சி மேலாண்மையை குறித்து இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
மேலாண்மை முறைகள்
பல்வேறு விவசாய நடைமுறைகளின் மூலம், பூச்சிகளை அழித்தல் அல்லது பூச்சிகளை கட்டுபடுத்துவதே இந்த மேலாண்மை முறையின் நோக்கம். பல்வேறு மேலாண்மை முறைகள் கீழே விளக்கப்பட்டுள்ளது.
-
இயந்திர முறைகள்
-
மரபியல் முறைகள்
-
ஒழுங்கு முறைகள்
-
உயிரியல் முறைகள்
-
இரசாயன முறைகள்
செடி கொடிகளில் கழிவுகளை நீக்குதல், வரப்புகளை சீர்படுத்துதல், ஆழ உழுதல் மூலம் பூச்சி தாக்குதலை தவிர்க்கும் வண்ணம் நாற்றங்கால் அல்லது நடவு வயலை தயார் செய்யவேண்டும்.
-
மண் பரிசோதனை மூலம் சத்து பற்றாக்குறையை அறிந்து, அதன் அடிப்படையில் தேவையான உரமிட வேண்டும்.
-
சுத்தமான மற்றும் சான்றளிக்கப்பட்ட விதைகளை பூஞ்சைக்கொல்லி மற்றும் உயிரி பூச்சிக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்தால் விதையின் மூலம் பரவும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
-
பூச்சித் தாக்குதலை எதிர்க்கும் அல்லது தடுக்கும் வகையிலான விதை இரகங்களைத் தேர்ந்தெடுப்பது பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
-
பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கும் பருவகாலங்களை தவிர்க்கும் வகையில் விதைத்தல் மற்றும் அறுவடையினைத் திட்டமிடவேண்டும்.
-
பூச்சிக்கு உணவு ஆகாத மாற்று பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி முறையைக் கையாள வேண்டும். இது மண் மூலம் பரவும் நோயைத் தடுக்கும்.
-
செடிகளுக்கு இடையே போதிய இடைவெளி, பயிர்களுக்கு ஆரோக்கியத்தை தந்து பூச்சித் தாக்குதலையும் தவிர்க்கும்.
-
பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த கிளைகளை வெட்டும்போது ஏற்பட்ட பெரிய வடுக்களை போர்டாக்ஸ் (Bordeaux) பூச்சு கொண்டு மூட வேண்டும்.
-
சிறப்பான பழங்கள் அமைய, மகரந்த அதிகம் கொடுக்கும் பயிர்களை போதிய அளவில் தோட்டத்தில் நிறுவுங்கள்.
-
தேன்கூடு அமைத்தல் அல்லது மலர் தொகுப்பு அமைத்தல் மூலம் மகரந்தச் சேர்க்கையை அதிகரித்து பழ விளைச்சலைப் பெருக்கலாம்.
இயந்திர முறைகள்
-
பூச்சிகள் மற்றும் அவற்றின் முட்டைகள், கூட்டுபுழுக்கள், கூடுகள் மற்றும் பாதிப்படைந்த பாகங்களை நீக்கி அழிக்கவேண்டும்.
-
மூங்கிலால் ஆன கூடு மற்றும் பறவை அமரக்கூடிய குச்சிகள் அமைத்து பூச்சிகளின் இயற்கை எதிரிகளை ஊக்குவிக்க வேண்டும்.
-
ஒளிபொறிகளைக் கொண்டு பூச்சிகளை பிடித்து அழிக்கலாம்.
-
கயிறு மூலம் இலைகளில் காணப்படும் புழுக்களை கீழே விழச்செய்து, அவற்றை அழித்தல்.
தேவைப்படும் இடங்களில் பறவைகளைத் அச்சுறுத்தும் அமைப்புகளை நிறுவ வேண்டும்.
-
பறவை அமரக்கூடிய குச்சிகள் அமைத்து அவை அவற்றில் அமர்ந்து பூச்சிகள் மற்றும் அவற்றின் முட்டைகள், கூட்டுபுழுக்கள், கூடுகளை உண்ணும்படி செய்யவேண்டும்.
-
இனக்கவர்ச்சி பொறி கொண்டு பூச்சி இனப்பெருக்கத்தை தடுத்து பூச்சி தாக்குதலின் அளவை கட்டுப்படுத்தலாம். மேலும் பெரிய அளவில் பூச்சிகளை அழிக்கவேண்டும்.
மரபியல் முறைகள்
பூச்சியை எதிர்க்கும்/தாக்குபிடித்து வளர்ந்து, குறிப்பிடத்தக்க விளைச்சலை அளிக்ககூடிய, பயிர்வகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒழுங்கு முறைகள்
அரசு இயற்றியுள்ள ஒழுங்குமுறை விதிகள் பூச்சி தாக்கிய பயிரின் விதைகள் மற்றும் செடிகளை நாட்டிற்குள் நுழைவதையோ அல்லது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு எடுத்துச் செல்வதையோ கட்டுப்படுத்துகின்றன. இத்தகைய கட்டுப்பாட்டுமுறை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டுபாடுகள் என இருவகைப்படும்.
உயிரியல் முறைகள்
பாரசிட்டாய்ட்டுகள்
உயிரினங்கள் தனக்கு தங்கி இடம் அளித்த உயிரினத்தின் உடல் மீது முட்டையிட்டு தங்கள் ஆயுள் சுழற்சியை அங்கேயே முடித்துக்கொள்ளும் அதனால் தங்க இடமளித்த உயிரினம் கொல்லப்படும். தங்க இடமளித்த உயிரினத்தின் வளர்ச்சி நிலையின் அடிப்படையில் பாரசிட்டாய்ட்டுகள் பல வகைப்படுத்தப்படும் முட்டை, இளம்புழு, முதிர்ந்த கூட்டுப்புழு, முட்டை-புழு அல்லது இளம்புழு-கூட்டுப்புழு பாரசிட்டாய்ட்டுகள் எனப் பல வகைப்படும். உதாரணம்:. டிரைக்கோகிராமா, அபன்டெலிஸ், ப்ரகான், சிலொனஸ், ப்ரசெமெரியா மற்றும் சுடோக்னோடொபஸ் முதலியன.
கொன்று தின்னிகள்
இவை மற்ற உயிரினங்களை உணவாகக் கொள்ளும். உதாரணம்: பல வகையான சிலந்திகள், தட்டான்பூச்சிகள், ஊசிதட்டான் மற்றும் பொறி வண்டுகள், க்ரிஸொபா இனங்கள் மற்றும் பறவைகள் முதலியவை.
நோய்க் கிருமிகள்
நோய்க் கிருமிகள் பிற உயிரினங்களில் நோயை ஏற்படுத்தி அவற்றை அழிக்கின்றன. பூஞ்சானங்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஆகியன முக்கியமான நோய்ப் பரப்பும் கிருமிகளாகும் சில வகை நூற்புழுக்களும் பூச்சிகளுக்கு நோயை உண்டாக்குகின்றன .
உயிரி கட்டுப்பாட்டு முறைகள்
பூச்சிகளுக்கு எதிராக நோயை ஏற்படுத்தும் உயிரினங்களை நீரிலோ அல்லது பொடி வடிவத்திலோ குறைந்த செலவில் ஆய்வகத்தில் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இவைகளை பாதிக்கப்பட்ட பயிர்களின் மீது தெளிக்கும் போது அந்த பூச்சிகள் அழிக்கப்படுகின்றன.
இரசாயன முறைகள்
பூச்சி தாக்குதல் விகிதம் மற்றும் பொருளாதார வரம்புகளை (ETL)அறிந்த பின்னர் இரசாயன பூச்சிக்கொல்லிகளை தேர்ந்த அளவில் தேவைப்படும் கடைசி முயற்சியாகவே கையாளவேண்டும். இவ்வாறு கடைபிடிப்பது செலவுகளைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் இதர பிற பிரச்சனைகளையும் தவிர்க்கும். இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்து முன் கீழ் கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி என்ன தெளிக்க வேண்டும், எவ்வாறு தெளிக்கவேண்டும் எனபதை தீர்மானிக்க வேண்டும்.
-
பொருளாதார வரம்புகள் (ETL) மற்றும் பூச்சிகள் மற்றும் அவற்றின் எதிர் உயிரிகளின் விகிதம்.
-
வேம்பு அல்லது உயிரி பூச்சிக்கொல்லிகள் போன்ற பாதுகாப்பான பூச்சிக்கொல்லிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
-
பூச்சி தாக்குதல் சில இடங்கள் அல்லது பகுதியில் மட்டுமே இருந்தால் வயல் முழுவதும் பூச்சிக்கொல்லியைத் தெளிக்கக் கூடாது.
-
மக்களால் நேரடியாக உட்கொள்ளப்படுவதால் பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
-
அதிக நச்சுத்தன்மை உள்ள மற்றும் பல தீய பின்விளைவுகளை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லிகளைப் பரிந்துரைக்கக் கூடாது.
-
அதிக இலாபம் ஈட்டும்பொருட்டு விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மை குறையத் தேவையான கால இடைவெளிக்கு முன்னரே பயிர்களை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு செல்கிறார்கள். இது நச்சுத்தன்மை, நீண்ட நாள் பாதிப்பு மற்றும் சில நேரங்களில் மரணத்தைக்கூட ஏற்படுத்தலாம்.
-
பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது அதிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவேண்டும்.
இதன் தொடர்ச்சியை அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்..
Source : http://ppqs.gov.in/
மேலும் படிக்க..
வேளாண் துறையில் அதிக லாபம் பெற உதவும் சிறு தொழில்கள்!
வறண்டு வருகிறது பூண்டி ஏரி- சென்னைக்குத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து