ஆழியாறு அணை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள குளங்களில், வண்டல் மண் எடுக்க அனுமதி கொடுத்து, நீராதாரங்களை காக்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொள்ளாச்சி அடுத்த, ஆழியாறு அணையில் இருந்து, ஆழியாறு முதல் கோவை குறிச்சி வரையில், மக்களுக்கு குடிநீர் வழங்க, பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும், கேரள மாநில பாசனத்திற்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
வண்டல் மண் (Vandal Soil)
ஆழியாறு அணை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயத்துக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. அதேபோல், ஆனைமலை அடுத்த குளப்பத்து குளம், குப்புச்சிபுதுார் அய்யன் குளம், வேட்டைக்காரன்புதுார் கோழிப்பண்ணை குளம் மற்றும் சமத்துாரில் உள்ள எலவக்கரை குளம், பாசனத்துக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்நிலையில், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, வண்டல் மண் எடுத்து, ஆழியாறு அணை, குளப்பத்து குளம் மற்றும் எலவக்கரை குளத்தில் நீர்மட்டத்தை உயர்த்த அரசு திட்டமிட்டது. இதற்காக, வண்டல் மண் எடுக்க, 2017ல் அரசாணை வெளியிடப்பட்டது. விவசாயிகள் பலரும் பயனடைந்தனர்.
இதேபோல், 2019ம் ஆண்டு குளங்களில் மட்டும் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டு, நீராதாரங்கள் காக்கப்பட்டன. அதன்பின், வண்டல் மண் எடுக்க அரசு எவ்வித உத்தரவும் வெளியிடவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக, அணை, குளங்கள் துார்வாரப்படாமல் உள்ளன. இந்நிலையில், நடப்பாண்டு அணை, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டுமென விவசாயிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, கோடை காலத்தில் நீர் இருப்பு குறைந்து வருவதால், ஆழியாறு அணை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள குளங்களில் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதுவே, வண்டல் எடுக்க சரியான தருணமாகும். அப்போது தான், தென்மேற்கு பருவமழை காலத்தில், நீராதாரங்களில், நீர் இருப்பை அதிகரிக்க முடியும். நீர்நிலைகளை காக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
நீர் ஆதாரம் (Water Resource)
விவசாயிகள் கூறியதாவது: 2019ல் வண்டல் மண் எடுக்கப்பட்ட, குப்புச்சிபுதுார் அய்யன் குளத்தில் தற்போது தண்ணீர் ததும்புகிறது. இதனால், குளத்தை சுற்றிலும் பல கி.மீ., தொலைவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஆனால், அதீத வெயிலின் காரணத்தால் ஆழியாறு அணை மற்றும் பல குளங்களில் தற்போது நீர் இருப்பு குறைந்துள்ளது. ஏப்ரல் இறுதி முதல், மே மாதத்துக்குள் அணை, குளங்களை துார்வாரி வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.
வண்டல் மண் எடுத்தால் மட்டுமே, நீராதாரங்களின் நீர்மட்டம் உயரும்; விவசாயிகளுக்கு வண்டல் மண் கிடைக்கும். வருவாய்த்துறையினர் விரைவில் நீராதாரங்களை கணக்கெடுத்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். உரிய பருவத்தில் வண்டல் மண் எடுத்து ஆழப்படுத்தினால், வரும் மழைக்காலத்தில் அதிகப்படியான நீர் சேமிக்க முடியும்.
மேலும் படிக்க
நவீன தொழில்நுட்பத்தில் தரமான விதைகள் உற்பத்தி செய்தால் கூடுதல் இலாபம்!
மாசிப்பட்டத்தில் இறவைப் பயிராக பருத்தி சாகுபடி: சில நுணுக்கங்கள்!