சமவெளிப்பகுதியில் ஜாதிக்காய் சாகுபடி மேற்கொண்டு கணிசமாக லாபம் பார்க்கலாம் என தமிழக விவசாயிகளை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் அமைந்துள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த முனைவர் இரா.ஜெயவள்ளி ஜாதிக்காய் சாகுபடியில் ஈடுப்பட்டு தமிழக விவசாயி குறித்து சிறப்பு கட்டுரை ஒன்றினை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
மலைப் பிரதேசங்களிலும், அதையொட்டிய சமவெளி பகுதியிலும் விளையும் சில பிரத்யேக பயிர்கள் மற்ற இடங்களில் சரிவர வளராது. ஆனால் சில பயிர்களை சமவெளியிலும் சாகுபடி செய்து சாதித்து வருகிறார்கள் தொழில்நுட்பம் தெரிந்த சில விவசாயிகள்.
ஜாதிக்காய் சாகுபடியில் புதுக்கோட்டை விவசாயி:
மிளகு, பாக்கு என பல பயிர்கள் இப்போது சர்வ சாதாரணமாக சமவெளியில் பயிரிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அனவயல் அருகே உள்ள மாங்காடு பட்டிபுஞ்சை பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்ற விவசாயி தனது நிலத்தில் ஜாதிக்காயை சோதனை முயற்சியாக பயிரிட்டு அதில் தற்போது வெற்றியும் கண்டிருக்கிறார். சுற்றிலும் தென்னை மரங்கள் உயர்ந்து நிற்கின்றன. அதனிடையே பலா மரங்களும், கிளுவை மரங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. கிளுவை மரங்களில் மிளகு கொடிகள் கொத்துக்கொத்தாக காய்த்திருக்கின்றன.
இப்படியொரு பசுமையான வயலில் அங்கொன்றும் இங்கொன்றுமா செழித்து வளர்ந்திருக்கின்றன ஜாதிக்காய் செடிகள். அவற்றில் எலுமிச்சை பழங்கள் போல மரத்திற்கு மரம் காய்த்திருக்கின்றன.
இதுக்குறித்து விவசாயி மாசிலாமணி தெரிவித்தவை பின்வருமாறு- “எங்களுக்கு சொந்தமான 20 ஏக்கரில் நானும், எனது அண்ணன் தங்கையாவும் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு மரம் வளர்ப்பது மிகவும் பிடிக்கும். குமிழ், தேக்கு, வேம்பு, மகோகனி உள்ளிட்ட மரங்களை வளர்த்து வருகிறோம். மேலும் தென்னை, பலா, மிளகு உள்ளிட்டவற்றையும் பயிர் செய்கிறோம். நாங்கள் ஆரோக்கியமாக சாப்பிடுவதற்காக காய்கறி பயிர்களையும் பயிரிடுகிறோம்.”
கைக்கொடுத்த மிளகு சாகுபடி:
”கொத்தமங்கலத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் எங்களை மர வகைகளை வளர்க்க ஊக்குவித்தார். அவ்வப்போது புதிதாக ஏதாவது செய்யலாம் என ஆலோசனை கொடுத்தார்."
"அதன்படி கடந்த 2008- ஆம் ஆண்டில் ஒரு ஏக்கர் நிலத்தில் மிளகு சாகுபடி செய்ய ஆரம்பித்தோம். இதை தென்னை, கிளுவை, மிளகு என்ற முறையில் செய்தோம். இந்த வயலில் ஏற்கனவே 25 க்கு 25 அடி இடைவெளியில் தென்னை மரங்கள் இருந்தன. இதன் இடையே 5 க்கு 5 அடி இடைவெளியில் கிளுவையை நடவு செய்தோம். அதன் அருகில் மிளகுச் செடிகளை நடவு செய்தோம். கிளுவை நல்ல அடர்த்தியாக குறைந்த உயரத்தில் வளரும். இது அதிக உயரத்திற்கு வளர்ந்தாலும் எளிதாக வெட்டி விடலாம். இதன் மூலம் இதில் குறைந்த உயரத்தில் படரும் மிளகுச் செடிகளில் எளிதான முறையில் அறுவடை செய்யலாம்.”
“அதிகமாக கூலி ஆட்கள் தேவைப்படாது. மிளகுச்செடியும் அதிகளவில் சேதம் ஆகாது. வயலுக்கு உயிர்வேலி அமைத்தது போலவும் இருக்கும். கிளுவை மைக்ரோ கிளைமேட்டை தரவல்ல தாவரம். இது அதிக வெப்பத்தை குறைத்து மிதமான சீதோஷ்ண நிலையை உருவாக்கும். தழைச்சத்தை கிரகித்து பயிர்களுக்கு வழங்கும். மிளகுக் கொடிக்கு நல்ல கிரிப் கிடைக்கும். இதனால் மிளகுக் கொடி செழித்து வளரும். இதன் காரணமாக கிளுவை கூட்டணியில் மிளகை நடவு செய்தோம். இவ்வாறு பயிர் செய்த மிளகில் 2010 ஆம் ஆண்டில் இருந்து மகசூல் கிடைத்து வருகிறது. முதலில் ஒரு செடிக்கு கால் கிலோ மகசூல் கிடைத்தது. பின்னர் படிப்படியாக மகசூல் அதிகரித்தது.”
குற்றலாத்திலிருந்து ஜாதிக்காய்:
“இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டில் சண்முகசுந்தரம் ஆலோசனையின் பேரில் இந்த நிலத்தில் ஜாதிக்காய் நடவு செய்தோம். ஜாதிக்காய் பெரும்பாலும் குற்றாலம், பொள்ளாச்சி உள்ளிட்ட மலையையொட்டி பிரதேசங்களில்தான் வரும். இதற்கு காற்றில் நல்ல ஈரப்பதம் இருக்க வேண்டும். இந்த சூழல் புதுக்கோட்டைக்கு ஒத்து வருமா? என யோசித்தோம். இருந்த போதும் சோதனை அடிப்படையில் ஜாதிக்காயை சாகுபடி செய்தோம். குற்றாலத்தில் இருந்து 15 செடிகளை வாங்கி வந்து 2*2*2 அடி அளவில் குழியெடுத்து அதில் அடியுரமாக தொழுவுரம், கடலை புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு ஆகியவற்றை இட்டு நடவு செய்தோம்.”
”உயிர் தண்ணீர் பாசனத்திற்கு பிறகு 10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தோம். வேண்டியபோது இயற்கை உரங்களை இட்டோம். ஜாதிக்காய் இயல்பிலேயே நோய் எதிர்ப்பு திறன் கொண்டது என்பதால் இதில் பூச்சி, நோய் தாக்குதல் அதிகளவில் இருக்காது. இவ்வாறு வளர்த்து வந்த செடிகள் தற்போது நன்றாக வளர்ந்து தளதளவென்று காட்சியளிக்கிறது. இதில் கடந்த ஆண்டில் காய்கள் காய்க்கத் தொடங்கியது. இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதத்திலும் காய்கள் காய்க்கத் தொடங்கியது. இப்போது செடிக்கு சராசரியாக 10 காய்கள் காய்த்திருக்கின்றன. இன்னும் 2 ஆண்டுகளில் காய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.”
”ஜாதிக்காயில் பெரும்பாலும் 7-வது ஆண்டில்தான் நல்ல மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். 10 ஆண்டுகளில் மரத்திற்கு 10 கிலோ காய்கள் கிடைக்கும் என கூறுகிறார்கள். கூடுதலாக 2 கிலோ ஜாதி பத்திரி கிடைக்கும். ஜாதிக்காயில் உள்ள கொட்டைகள் தற்போது கிலோ ரூ.300-க்கு மேல் விற்கப்படுகிறது. ஜாதி பத்ரி ரூ.1300-க்கு மேல் விற்கப்படுகிறது."
Read also: நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்!
"ஜாதிக்காய், ஜாதி பத்திரி ஆகியவை மருத்துவக் குணம் மிகுந்தது என்பதால் இவற்றை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக்கொள்கிறார்கள். இதனால் இதை மேலும் கூடுதலாக சாகுபடி செய்ய இருக்கிறோம்” என்றார்.
ஜாதிக்காய் சாகுபடி தொடர்பான சந்தேகங்கள் மற்றும் மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த முனைவர் இரா.ஜெயவள்ளி அவர்களைத் தொடர்புக் கொள்ளலாம் . (தொடர்பு எண்: 94876 16728)
Read more:
வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி !