நெல் விதைகளை தர ஆய்வு செய்து, போதிய ஈரப்பதத்துடனும் சேமித்து வைத்தால் விளைச்சலின் போது அதிக மகசூல் கிடைக்கும் என குமரி மாவட்ட வேளாண் அலுவலர் மோகன் தெரிவித்துள்ளார். நெல் விதைகளை தர ஆய்வு செய்ய ரூ.30 மட்டுமே செலவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நெல் விதை தரத்தில் கவனம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் அறுவடைக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள வேளாண் அலுவலர் மோகன், நாம் தரமான விதைகளை அறுவடை செய்து, நன்கு சுத்தம் செய்து அதன் தரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். நெல் விதை குவியல்களை நன்கு காயவைத்து, நெல் விதைக்கு தேவையான 13 சதவீதம் ஈரப்பதத்துடன் காற்றோட்டமான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும் என்கிறார்.
ரூ.30ல் நெல் விதை தர ஆய்வு
இவ்வாறு சேமிக்கப்பட்ட விதையின் ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் புறத்தூய்மையை தெரிந்துகொள்ள 50 கிராம் நெல் விதைகளை தங்கள் முகவரியுடன் நாகர்கோவில் புன்னைநகர் திருபாப்பு லேஅவுட் தெருவில் அமைந்துள்ள கன்னியாகுமரி விதைப்பரிசோதனை நிலையத்தில் கொடுத்து விதைகளின் தரத்தை அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும். நெல் விதையின் ஈரப்பதத்தை அறிந்துகொள்ள நெல் விதையை 50 கிராம் அளவிற்கு தனியாக ஒரு பாலித்தீன் கவரில் வைத்து அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மகசூல் அதிகரிக்கும்
நாம் இவ்வாறு ஈரப்பதத்தை அறிந்துகொள்வதால் பூச்சி நோய் தாக்குதல் எதுவுமின்றி தரமான விதையினை பெற ஏதுவாக இருக்கும். அவைகளை விளைச்சலின் போது அதிக மகசூல் தரும் என்றும் வேளாண்மை அலுவலர் மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
சொட்டுநீர் பாசன முறையில் கரும்பை பயிரிட்டு கூடுதல் மானியம் பெற்றிடுங்கள்! - விவசாயிகளுக்கு அழைப்பு!
மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா நெல் ஆராய்ச்சிகளுக்கு ஒப்பந்தம்! வேளாண் பல்கலை துணைவேந்தர் தகவல்!
மேட்டூர் உபரி நீரை சரபங்கா வறண்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் - முதல்வர் பழனிசாமி துவக்கிவைப்பு!!