முள்ளங்கி மற்றும் அதன் இலைகள் (கீரை) சிறுநீரகம் தொடர்பான நோய்கள், இரைப்பை கோளாறு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அறியப்படுகிறது. இருப்பினும் பல காரணங்களுக்காக மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது முள்ளங்கி இந்தியாவில் பெரிய அளவில் உட்கொள்ளப்படுவதில்லை. அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கு ஆராயலாம்.
முள்ளங்கியில் சிவப்பு நிறத்தில் இருந்து வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் கருப்பு நிறத்தில் பல வகைகள் உள்ளன. அவை வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் வருகின்றன. இருந்தாலும், அவை அனைத்திற்கும் ஒரே மாதிரியான குணநலன்கள் தான் உள்ளது.
கலாச்சார உணவு விருப்பத்தேர்வுகள்:
இந்திய உணவு வகைகளில் பாரம்பரியமாக பல்வேறு வகையான காய்கறிகள் நம் உணவு பழக்க முறையில் ஒரு அங்கமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்த்தால் முள்ளங்கி இந்தியாவின் பல பகுதிகளில் வாழும் மக்களின் உணவுப்பழக்க முறையில் முள்ளங்கிக்கு பெரிதாக இடமில்லை.
இருப்பு அளவு:
சந்தைகளிலேயே சில பகுதிகளில், மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது முள்ளங்கி எளிதில் கிடைக்கும் வகையில் இல்லை. தேவைக்கேற்ப தான் விவசாயிகள் முள்ளங்கியினை பயிரிடுவதால் சந்தையில் இருப்பின் அளவும் குறைவாகவே உள்ளது.
காலநிலை மற்றும் சாகுபடி:
முள்ளங்கிகள் குளிர்ந்த காலநிலையில் நன்றாக வளரும், மேலும் தட்பவெப்பம் அதிகமாக இருக்கும் இந்தியாவின் சில பகுதிகளில் அவற்றின் சாகுபடி குறைவாக இருக்கலாம். இதன் விளைவாக, உள்ளூர் கால சூழ்நிலையில் செழித்து வளரும் மற்ற காய்கறிகளை விரும்பி அதிக அளவில் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சமையல் முறைகள்:
ஏற்கெனவே குறிப்பிட்டது போல் முள்ளங்கி, நமது பாரம்பரிய உணவு முறைகளில் முக்கிய அங்கமாக திகழாத நிலையில் பெரும்பாலும் சாலட்களில் பச்சையாகவோ அல்லது உணவுகளினை அலங்கரிக்கவோ முள்ளங்கி பயன்படுத்தப்படுகிறது.
இதைவிட முக்கியமாக கருதப்படுவது, இந்திய உணவு வகைகளில் பெரும்பாலான தயாரிப்புகள் நீண்ட நேரம் எடுக்கும் தன்மைக்கொண்டது. முள்ளங்கியானது விரைவில் வெந்துவிடும் தன்மைக்கொண்டது. மேலும் அவற்றின் சுவை ஒட்டுமொத்த உணவின் ருசியையும் மாற்றிடும் தன்மைக் கொண்டது.
உடல்நலக் கோளாறு:
முள்ளங்கி மற்ற காய்கறிகளைப் போலவே ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாக விளங்கினாலும், முள்ளங்கியை இரவில் தாமதமாக சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை உண்டாக்குவதோடு அசௌகரியம் அல்லது தூக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் போதுமான வரை அவற்றினை இரவில் சமைக்க/சாப்பிட பலர் விரும்புவதில்லை.
ஊட்டச்சத்து ரீதியாக, முள்ளங்கியில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் அதிக நார்ச்சத்து உள்ளது. மேலும் முள்ளங்கியானது வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாகும்.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் செரிமானத்தை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும். எனவே, நீங்கள் உங்களது அன்றாட உணவு பழக்க வழக்கங்களில் முள்ளங்கியினையும் ஒரு தேர்வாக கொள்ளலாம்.
Read more:
கொஞ்சம் மருந்து தெளிச்சாலும் பிரச்சினை தான்- மிளகாய் ஏற்றுமதியில் அசத்தும் இயற்கை விவசாயி
மாடித்தோட்டம்- கவனிக்கப்படாத ஹீரோ முள்ளங்கி தான்! ஏன் தெரியுமா?