வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 வட கடலோர மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலேர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இயல்பைவிட அதிகம் (More than normal)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட சில மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வெளுத்து வாங்கி வரும் மழையால் அனைத்து பகுதிகளிலும் இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகி இருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
ரெட் அலேர்ட்
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மழை நீடிக்கும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 12 வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட் தொடரும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக கனமழை (Very heavy rain)
அதன்படி இன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கனமழை (Heavy rain)
அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
3 மணி நேரத்திற்கு
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கன மழைத் தொடர வாய்ப்புள்ளது.
29.11.21
மிக கனமழை (Very heavy rain)
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
புதிய தாழ்வு-மழை இருக்குமா? (Will there be a new downpour?)
நாளை (திங்கட்கிழமை) அந்தமான் கடல் பகுதியில் புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகிறது என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் (வருகிற 1-ந் தேதி) மேற்கு-வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும் என்றும் ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
இந்தத் தாழ்வுப் பகுதி, வலுப்பெற வாய்ப்பு இருப்பதால், தமிழகத்துக்கு தற்போது வரை மழைக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் அது வலுப்பெறாமல் கீழ் நோக்கி நகரும் பட்சத்தில் தமிழகத்துக்கு மீண்டும் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
30.11.21 வரை
குமரி கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடல், தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், அந்தமான் கடல்பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மேற்சொன்ன நாட்களில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
உருவாகிறது 4-வது புயல் சின்னம் - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!