தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலேர்ட்விடுக்கப்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 செ.மீ. மழை
கொட்டித் தீர்த்த கனமழை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை தீவாக மாறியச் சென்னை. இவ்வாறாகச் சென்னை மட்டுமல்ல, மழை துவம்சம் செய்த மாவட்டங்கள் ஏராளம்.
வடகிழக்கு பருவமழை கடந்த 3 நாட்களாகத் தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவு ஒரே நாளில் அதிகபட்சமாக 23 சென்டிமீட்டர் மழை பதிவானது. அதன் தொடர்ச்சியாக சில மாவட்டங்களிலும் கன முதல் மிக கன மழை வரை பெய்து வருகிறது.
தாழ்வுப் பகுதி
இதனிடையே ஏற்கனவே அறிவித்தபடி, வங்க கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.
ரெட் அலேர்ட் (Red Alert)
இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும் பெய்யக்கூடும்.
அதிகனமழை 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை பெய்யக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வழங்கப்படும் ரெட் அலேர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை (Very heavy rain)
இதேபோல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழை
-
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
-
கன முதல் மிக கனமழை பெய்யக்கூடிய இடங்களில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையில் மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த இடங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு அலேர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதிகனமழை
நாளை (வியாழக்கிழமை) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். இந்த பகுதிகளுக்கும் ரெட் அலேர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் (ஆரஞ்சு அலேர்ட்), டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
11.11.21 வரை
தெற்கு வங்க கடல் மத்திய பகுதிகளில் குறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தாழ்வு மண்டலமாக (As a depression zone)
தென் கிழக்கு வங்க கடல்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவோ அல்லது நாளை காலையோ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது மேலும் மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை தமிழக கடற்கரையை நெருங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தான் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 20 செ.மீ. மழை!