தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து ஆண்டுத்தோறும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் 2024 ஆம் வருடத்திற்கான 20 புதிய பயிர் ரகங்களை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வெளியிட்டார்.
நடப்பாண்டு வேளாண் பயிர்கள் (10 எண்ணிக்கை) மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் (10 எண்ணிக்கை) என சுமார் 20 புதிய ரகங்கள், தமிழ்நாடு அரசின் மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 20 புதிய ரகத்தில் நடப்பாண்டு தினை, பாசிப்பயறு, நிலக்கடலை, பருத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய இரகங்களின் சிறப்பம்சம் குறித்து இப்பகுதியில் காணலாம்.
தினை ஏடிஎல் 2:
- பெற்றோர்: கோ 6 x ஐஎஸ்இ 198
- வயது: 80-85 நாட்கள்
சிறப்பியல்புகள்:
- மகசூல்: தானியம்: 2174 கிலோ/எக்டர், தட்டை: 2688 கிலோ/எக்டர்
- திரட்சியான, எளிதில் உதிராத மணிகளை உடையது
- அதிக புரதம் (3%) மற்றும் அதிக அரவைத்திறன் (68.4%)
- தண்டு ஈ, குலை நோய், பழுப்பு புள்ளி மற்றும் துரு நோய்களுக்கு எதிர்ப்புத்திறன்
பாசிப்பயறு விபிஎன் 7:
- பெற்றோர்: இசி 496839 x ஐபிஎம் 409-4
- வயது: 65-70 நாட்கள்
சிறப்பியல்புகள்:
- மகசூல்: 900 கிலோ/எக்டர்
- பருமனான விதைகள் (100 விதைகளின் எடை: 5-6.0 கிராம்)
- மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பிற்கு ஏற்றது
- முளை கட்டிய பயிரில் அதிக வைட்டமின் சி (17 மிகி /100 கிராம்)
- மஞ்சள் தேமல் நோய், சாம்பல் நோய், இலை சுருள் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு
நிலக்கடலை கோ 8:
- பெற்றோர்: கோ 7 x ஐசிஜிவி 03042
- வயது: 110-115 நாட்கள்
சிறப்பியல்புகள்:
- மகசூல்: ஆடிப்பட்டம்: 2527 கிலோ/எக்டர்:
- கார்த்திகை-மார்கழி பட்டம்: 2343 கிலோ/எக்டர்
- நடுத்தர பருமனான விதை
- அதிக எண்ணெய்ச் சத்து (51-52%) மற்றும் உடைப்புத்திறன் (69%)
- இலை சுருட்டுப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலைப்புள்ளி மற்றும் துரு நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன்
பருத்தி விபிடி 2:
- பெற்றோர்: சுராஜ் x டிசிஎச் 1819
- வயது: 120-130 நாட்கள்
சிறப்பியல்புகள்:
- குளிர்கால மானாவாரி மற்றும் நெல் தரிசில் பயிரிட ஏற்றது
- சராசரி மகசூல்: 1624 கிலோ/எக்டர்
- நீண்ட இழை பருத்தி (6மிமீ)
- ஒரே சமயத்தில் காய்கள் முதிர்ச்சி அடைவதால் இயந்திர அறுவடை மற்றும் அடர் நடவு முறைக்கு ஏற்றது
- தத்துப் பூச்சி, அல்டர்னேரியா இலைப்புள்ளி மற்றும் சாம்பல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன்
- காய் அழுகலுக்கு எதிர்ப்புத் திறன்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 18 கல்லூரிகள், 40 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு தட்ப வெப்ப பகுதிகளுக்கு ஏற்ப புதிய ரகங்கள் உருவாக்குவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் மூலம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இருந்து ஆண்டு தோறும் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக புதிய ரகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
நெல் மற்றும் சோளம் பயிரில் TNAU வெளியிட்ட புதிய இரகங்களின் சிறப்பம்சம் என்ன?
மீன் வளர்ப்புக்கு 60 சதவீத மானியம்- போலி கால்நடை மருத்துவர்களுக்கு செக்மேட்