டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்துங்கள் என விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவற்றோடு, 18 கிராமங்களில் நேரடி கொள்முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதுக்குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றினையும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
அரியலூர் மாவட்டத்தில் தற்சமயம் மானாவாரி பயிர்கள் சாகுபடி மற்றும் சம்பா பருவம் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் தங்களது நிலங்களை அடியுரம் இடுவதற்கு தயாராகி வருகின்றனர்.
டி.ஏ.பி உரத்திற்கு மாற்று:
இந்நிலையில் டி.ஏ.பி. உர உற்பத்திக்கு மாற்றாக விவசாயிகள் சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களான 20:20:0:13, 10:26:26, 15:15:15 ஆகியவைகளை பயன்படுத்தலாம். மேலும், நானோ டிஏபி அனைத்து வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்திலும் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிறுவனங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தும் போது இதில் உள்ள சல்பர் மற்றும் கால்சியம் ஆகியவை பயிர்களுக்கு தேவையான கூடுதல் சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் விவசாயிகள் சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தினால் அதிக மகசூலை பெறலாம். இதனை அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் உரம் தொடர்பான விவரங்கள், புகார்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நேரடி கொள்முதல் நிலையங்கள்:
அரியலூர் மண்டலத்தில் கே.எம்.எஸ். 2024-2025 குறுவை பருவத்தில் தளவாய் கூடலூர், ஏலாக்குறிச்சி, சன்னாசிநல்லூர், திருமழப்பாடி, கண்டிராதீர்த்தம், நமங்குணம், செங்கராயன்கட்டளை, குருவாடி, குலமாணிக்கம், மஞ்சமேடு, கா.மாத்தூர், ஓலையூர், காடுவெட்டி, அருள்மொழி, ஸ்ரீபுரந்தான், கோவிந்தபுத்தூர், தூத்தூர் மற்றும் இலந்தைக்கூடம் ஆகிய 18 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் கடந்த 02.09.2024 முதல் திறக்கப்பட்டுள்ளது.
Read also: உவர்நீர் இறால் வளர்க்க ரூ.4.80 இலட்சம் வரை மானியம்- விண்ணப்பங்கள் வரவேற்பு!
கே.எம்.எஸ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதார விலை விபரம்:
- நெல் கிரேடு “ஏ” மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,320/- மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.130/- ஆகக்கூடுதல் தொகை ரூ.2,450/- ஆகும்.
- நெல் பொதுரகம்” மத்திய அரசின் குறைந்தபட்ட ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300/- மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.105/- ஆகக்கூடுதல் தொகை ரூ.2,405/- ஆகும்.
விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆதார், சிட்டா அடங்கல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நேரில் கொண்டு சென்று, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து E-KYC கொடுத்து Blue Tooth Printer கையடக்க கருவியில் விவசாயிகளின் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இதனடிப்படையில் முன்பதிவு செய்யப்படும்.
நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவு உறுதி செய்ததும், சம்பந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு, விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும், ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு நெல்லை கொண்டு சென்று விவசாயிகளின் கைரேகையை பதிவு செய்து விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை தூற்றி, சாக்குகளில் பிடித்து, எடை வைத்து, தைத்து, லாரியில் ஏற்றுவதற்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.10/- வீதம் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக கழகத்தின் மூலம் செலுத்தப்படுகிறது. விவசாயிகள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என அரியலுார் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., தான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Read more:
வேளாண் துறையின் சவால்கள்- TNAU சார்பில் குளோபல் நானோ கனெக்ட் மாநாடு
செயல்விளக்க கண்காட்சியுடன் காந்திகிராம வேளாண் அறிவியல் மையத்தில் பொன்விழா ஜோதி தொடரோட்டம்!