தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுகளால் (ரிக்டஸ் ரினோசிராஸ்) இலைகள் பாதிக்கப்பட்டு ஒளிச்சேர்க்கை குறைந்து 10 முதல் 15 சதவீதம் மகசூல் இழப்பு (Yield Loss) ஏற்படுகிறது. முழு வளர்ச்சியடைந்த வண்டுகளே தென்னை மரத்தை தாக்கி சேதம் விளைவிக்கின்றன. ஆண்டு முழுவதும் காணப்பட்டாலும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் தாக்குதல் அதிகம். இளம் தென்னை நாற்றுகளின் உச்சியில் விரிவடையாத மிருதுவான குருத்து பகுதியில் துளையிட்டு மரத்தின் உள்ளே சென்று குருத்தின் சாற்றை உறிஞ்சுகிறது. வளரும் மொட்டு பகுதியை கடித்து தின்கிறது.
காண்டமிருக வண்டு
தாக்கப்பட்ட பாகம் போக எஞ்சிய குருத்து பகுதி விரியும் போது மட்டையில் இலைகள் முக்கோண வடிவில் காணப்படும். பெண் வண்டுகள் மங்கிய வெள்ளை நிற நீள்வட்ட வடிவமுள்ள 150 முட்டைகளை உரக்குழி, இறந்த மரங்களின் தண்டுப்பகுதிகளில் இடுகிறது. புழுக்கள் அழுகிய மர திசுக்களை உணவாக கொள்வதால் தென்னை மரத்திற்கு அதிக பாதிப்பு இல்லை. முழு வளர்ச்சியடைந்த காண்டாமிருக வண்டு தலையில் நீண்ட கொம்புடன் காணப்படும்.
கட்டுப்படுத்தும் வழிமுறை
பெண் வண்டுகள் சராசரியாக 9 மாதங்கள் வரை உயிர் வாழும். இவற்றை அகற்றுவதே சேதத்தை குறைக்கும் வழி. இறந்த தென்னை மரங்கள், அழுகிய மர துண்டுகள், களை செடிகளை அகற்றுவதோடு அதிலுள்ள முட்டைகள் மற்றும் புழுக்களை அழிக்க வேண்டும். எருக்குழிகளை தென்னை மரங்களுக்கு (Coconut Trees) அருகில் வைக்க கூடாது. புழுக்கள் இதில் தான் வளர்கின்றன.
எருக்குழிகள் மற்றும் கம்போஸ்ட் குழிகளை வலைகளால் மூடி அடிக்கடி கிளறினால் வளர்ச்சியடைந்த புழுக்கள் வெளியேறுவதை தடுக்கலாம். ஊடு பயிராக தட்டைபயறு வளர்த்தால் முட்டையிடுவதை தவிர்க்கலாம். மண் பானையில் 5 லிட்டர் தண்ணீருடன் ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு கலந்து வண்டுகளை கவரலாம்.
மணல் இரு பங்கு, வேப்பங்கொட்டை துார் ஒரு பங்கு கலந்து நடுக்குருத்தின் 3 மட்டை இடுக்குகளில் இடவேண்டும். கோடை மற்றும் மழைக்காலங்களில் அந்தி நேரங்களில் விளக்குப் பொறி வைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
Also Read | சீசனில் மகசூல் தரும் செண்டுமல்லி! விலை கிடைத்தால் குறையாத வருமானம்!
பேக்குலோவைரஸ் ஒரைகடஸ் என்ற வைரஸை ஊசி மூலம் காண்டா மிருக வண்டின் வாயில் செலுத்தி 15 வண்டுகள் ஒரு எக்டேருக்கு என்ற அளவில் தோப்பில் விட்டால் அது பிற வண்டுகளுடன் கலந்து நோய் பரப்பி பிற வண்டுகளை அழிக்கும். ஏக்கருக்கு ஒரு இனக்கவர்ச்சி பொறியை (ரினோ லுார்) நிலத்தில் இருந்து 5 அடி உயரத்தில் வைத்தால் பெண் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
பாதிப்பு அதிகமாக இருந்தால் மரத்தின் கொண்டை பகுதியில் குருத்து பகுதியில் ஓட்டைகள் உள்ள ஒரு சின்ன பையில் போரேட் 10 சதவீத குருணை மருந்தை 5 கிராம் இடவேண்டும். இதனை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். எருக்குழிகளில் கார்பரில் 0.01 சதவீத துாளை துாவவேண்டும். சிறிய தென்னங்கன்றுகளின் குருத்து பகுதியில் நான்கைந்து நாப்தலீன் உருண்டைகள் இடவேண்டும்.
அமர்லால்
வேளாண்மை உதவி இயக்குனர் திருப்புல்லாணி,
ராமநாதபுரம்
94432 26130
மேலும் படிக்க
சீசன் இல்லாத காலத்திலும் மல்லிகை சாகுபடி சாத்தியமே!
ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு ஒப்புதல்!