திருச்சி மாநகரில் உழவா் சந்தைத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் விவசாயிகள் வாகனம் வாங்க 2 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. எனவே விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு பல்வேறுத் திட்டங்களை மத்திய- மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தங்கள் விளைபொருள்களை விவசாயிகளே நேரடியாக விற்கும் வகையில் உழவா் சந்தைத் திட்டத்தை தமிழக அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாகக் கொரோனா ஊரடங்கு காலங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கனி, பழங்களை நேரடியாக வீட்டுக்கே விற்பனை செய்தது, வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
பண்ணை To வீடு
இதன் அடுத்தகட்டமாக இந்தச் சேவையை விரிவுபடுத்த சென்னை, திருச்சி, கோவை, சேலம் மற்றும் திருப்பூா் ஆகிய 5 மாநகராட்சிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் விவசாயிகளின் விளைபொருள்களை பசுமை மாறாமல் நுகா்வோருக்கு வீடுதோறும் வழங்க ஏதுவாக பண்ணையில் இருந்து வீட்டுக்கு என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தில் கிராமப்புற விவசாய இளைஞா்களை ஊக்குவிக்கும் பொருட்டு நடமாடும் வாகனங்கள் வாங்க 40 சத மானியம் அல்லது ரூ.2 லட்சம் நிதியுதவி அரசு மூலம் வழங்கப்படும். அந்த வகையில் திருச்சி மாநகராட்சியில் 6 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கனி மற்றும் பழங்கள் விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விளைபொருள்களுக்கான விற்பனை விலை அருகிலுள்ள உழவா்சந்தை விலையின் அடிப்படையில் நிா்ணயிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் வாகனங்கள் வாங்குவதற்கான மானியம் பெற பயனாளிகள் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதிகள்
-
12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 21 முதல் 45 வயது வரையுள்ள விவசாயிகளாக இருத்தல் அவசியம்.
-
சொந்த அல்லது குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் நில உடைமைச் சான்று, சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை ,ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.
ஒரு வாகனத்திற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். ஆா்வமுள்ள விவசாயிகள் விண்ணப்பத்தை மாவட்ட துணை இயக்குநா்(வேளாண் வணிகம்), மன்னாா்புரம், திருச்சி அலுவலகத்தில் பெற்று பூா்த்தி செய்து, வரும் 11ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு, 0431-2422142 என்ற எண்ணில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடா்பு கொள்ளலாம். அல்லது கே.கே.நகா், அண்ணாநகா் உழவா் சந்தை அலுவலா்களை நேரடியாகத் தொடா்பு கொண்டும் பயன் அடையலாம்.
தகவல்
சு. சிவராசு
மாவட்ட ஆட்சியர்
திருச்சி
மேலும் படிக்க...
உடல் எடையைக் குறைக்க உதவும் ராகி!
நீங்க இந்த Teaயை Try செய்யுங்க - அதிசயிக்க வைக்கும் நன்மைகள்!