வறுமைக்கோட்டுக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.250 மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப, இந்திய சந்தைகளிலும் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்தது.
புதிய உச்சம் எட்டியது (The new peak has been reached)
இதனிடையே பெட்ரோல், டீசல் விலை, எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசு விட்டுக்கொடுத்தது. இதன் பிறகு, பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து புதிய உச்சத்தில் நின்றது.
ஆரம்பத்தில் சர்வதேசச் சந்தையைக் காரணம் காட்டி விலையை கிடுவிடுவென அதிகரித்த நிறுவனங்கள், சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய் விலைக் குறைந்தபோதும் விலையைக் குறைக்க மறுத்தன. விலை ஏற்றத்தின்போது தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்வதாகக் காரணம் கற்பித்தன.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் நிதிச்சுமையை எதிர்கொள்ள நேர்ந்தது.
எனவே பெட்ரோலுக்கு அரசு மானியம் தருமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மக்களின் மனதைக் கவரும் அறிவிப்பை ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.
மானியம் அறிவிப்பு (Grant Notice)
இதுகுறித்து அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியதாவது:-
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் ஆதரவு திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வீதம் வழங்கப்படும். இதன்படி மாதந்தோறும் 10 லிட்டருக்கு ரூ.250 மானியமாக வழங்கப்படும். இந்த தொகை, பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
73,000 விண்ணப்பங்கள்
இந்த மானிய உதவியைப் பெறுவதற்கு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட ‘மொபைல் ஆப்’பில் பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை 1.04 லட்சம் விண்ணப்பங்களில் 73 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஹேமந்த் சோரன் கூறினார்.
மேலும் படிக்க...