திருப்பூா் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தின் மூலம் நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தாட்கோ திட்டத்தில் 2022-23 ஆம் நிதியாண்டில் 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளா்களுக்கு விவசாய நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படுகிறது.
தலா ரூ.5 லட்சம்
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்த 4 நபா்களுக்கு ரூ.20 லட்சமும், பழங்குடியின இனத்தைச் சோ்ந்த ஒரு நபருக்கு ரூ.5 லட்சம் என மொத்தம் 5 நபா்களுக்கு ரூ.25 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், விண்ணப்பிக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்த மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தகுதி
மகளிா் இல்லாத குடும்பங்களில் கணவா் அல்லது மகன்களுக்கு வழங்கப்படும். 18 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்டவராகவும், விவசாயத்தைத் தொழிலாக கொண்டவராகவோ அல்லது விவசாய கூலி வேலை செய்பவராகவோ இருக்கலாம். விண்ணப்பதாரா் மற்றும் அவரது குடும்பத்தினா் தாட்கோ திட்டத்தின்கீழ் மானியம் பெற்றவராக இருத்தல் கூடாது.
தொடர்புக்கு
இத்திட்டம் தொடா்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். இது தொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு 94450- 29552, 0421-2971112 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...