சம்பா பட்ட பணிகள் துவங்க உள்ளதால், விவசாயிகள் கடந்தாண்டு அரசு வழங்க வேண்டிய நெல்லுக்கான உற்பத்தி மானியத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் விவசாயமே பிரதானத் தொழிலாக உள்ளது. மாநிலத்தில் 19,510 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.இதில், 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பிரதான பயிராக நெல் பயிரிடப்பட்டு வருகிறது.
3 போக மகசூல்
நெல் பயிர் நவரை (ஜனவரி-ஏப்ரல்), சொர்ணவாரி (ஏப்ரல்- ஜூலை), சம்பா (ஆகஸ்ட்-ஜனவரி) ஆகிய மூன்று பட்டங்களில் நெல் மற்றும் சம்பா என மூன்று பட்டங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.
மாற்றுப்பயிர்
இந்நிலையில், நகரமயமாக்கல், இடுபொருட்களின் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் நெல் பயிரிடுவதை தவிர்த்து, விவசாயிகள் மாற்றுப் பயிருக்கு மாறி வருகின்றனர்.
உற்பத்தி மானியம்
இந்நிலையை மாற்றி, விவசாயத்தை பாதுகாக்கும் பொருட்டு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நெல் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு அரசு, நெல் பயிருக்கு உற்பத்தி மானியம் வழங்கி வருகிறது.இத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும், நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏதேனும் இரு பட்டங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.12,500 உற்பத்தி மானியமாக வழங்கி வருகிறது.
ஆவணங்கள்
இந்த மானியத் தொகையை பெற விவசாயிகள், நெல் அறுவடை செய்த பின், விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, வங்கி பாஸ் புக், அரசு வழங்கிய விவசாய அட்டை மற்றும் நிலப் பதிவேட்டை இணைத்து அந்தந்த பகுதி வேளாண் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.அதன் அடிப்படையில் அரசு நிதி ஒதுக்கீடு செய்து மானியத்தை, விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது.
நவரை பட்டத்திற்கு வழங்கல்
அதன்படி, கடந்தாண்டு நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் கடந்த ஓராண்டாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், நவரை பட்டத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு மட்டும் கடந்த மாதம் உற்பத்தி மானியம் வழங்கப்பட்டது.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்தாண்டு சம்பா பட்டத்தில் 8,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெல்லுக்கான உற்பத்தி மானியம் வழங்கப்படாமல் உள்ளது.தற்போது, சம்பா பட்டத்திற்கான பணிகள் துவங்க வேண்டியுள்ளதால், கடந்தாண்டிற்கான உற்பத்தி மானியம் கிடைத்தால், உதவியாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அதிகாரிகள் விளக்கம்
இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, பயனாளிகள் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அதனால், உற்பத்தி மானியம் வழங்க போதிய நிதி இல்லை.வரும் 10ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கி, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனால், வெகு விரைவில் நெல் உற்பத்தி மானியம் வழங்கப்படும் என்றனர்.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!