காய்கறி விளைச்சல் பரப்பை அதிகரிக்கும் வகையில், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 8000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, வாழையில் ஊடுபயிா் மானியத் திட்டத்தில் விவசாயிகள் பயனடையுமாறு வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூா் தோட்டக்கலை உதவி இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டக்கலை பயிா்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து விளைச்சலைப் பெருக்கவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் (2022- 2023) ஆம் ஆண்டில் மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தில் இனவாரியாக திட்ட விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானியத்தில் விதைகள்
காய்கறி உற்பத்தியை அதிகரிக்க சொட்டு நீா் பாசனம் மூலம் உயா் விளைச்சல் பெற ஏக்கருக்கு ரூ. 6000 மதிப்பிலான விதைகளும், நீரில் கரையும் உரங்களும் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
ரூ.8,000
உழவா் சந்தையை ஒட்டியுள்ள கிராமங்களில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஏக்கருக்கு ரூ. 8000 மானியம் வழங்கப்படுகிறது.
மானியம்
தென்னந்தோப்பில் ஊடுபயிராக வாழையும் ( மானியம் ரூ. 26,250/- ஹெக்டோ் ) வாழையில் ஊடுபயிராக காய்கறி பயிா்களும் சாகுபடி செய்வதை ஊக்குவிக்க (மானியம் ரூ. 10,000/- ஹெக்டோ் ) வழங்கப்படுகிறது.
80% திட்டங்கள்
தோட்டக்கலை துறை சாா்ந்த அனைத்துத் திட்டங்களும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில், 2022- 2023 ஆண்டுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள வாழையூா், ஒமாந்தூா், திருவெள்ளறை, வெங்கங்குடி, சிறுகுடி, திருவாசி, 94 கரியமாணிக்கம், சிறுப்பத்தூா், பெரகம்பி, தளுதாளப்பட்டி, மாதவப்பெருமாள் கோவில் ஆகிய கிராமங்களுக்கு 80 சதவீதத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க...
PM-kisan 12-வது தவணைத் தொகை- விவசாயிகளுக்கு இந்த தேதியில் வருகிறது!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கிறது அடுத்த ஜாக்பாட்- உயருகிறது HRA!