கடலுார் மாவட்டத்தில், சம்பா சாகுபடி பணி ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். நடப்பு சம்பா பருவத்தில் (Samba cultivation) 2 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடி
இதில், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாக்கள் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில்மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா அல்லாத கடலுார், குறிஞ்சிப்பாடி,விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி உள்ளிட்ட தாலுகாக்களில் 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது.
3,550 டன் விதைகள் மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடிக்கு 3,550 மெட்ரிக் டன் விதைகள் தேவைப்படும். இதில், 30 சதவீதம் விதைகள் அரசு வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. மீதம் 70 சதவீத விதைகள் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும். மாவட்டத்தில் 350 உரிமம் பெற்ற தனியார் விற்பனை நிலையங்கள் உள்ளன. வேளாண் துறை மூலம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் துணைவேளாண்மை விரிவாக்க மையங்கள், தனியார் விதை விற்பனை நிலையங்களில் (Seed Sale Center) விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.
நடப்பு சம்பா பருவத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட 155 நாட்களில் விளையும் மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, சாவித்திரி (அ) சி.ஆர் -1009 சப்-1, மற்றும் மத்திய பட்ட ரகங்களான 135 முதல் 140 நாட்களில் விளையும் சம்பா மசூரி (அ) பி.பீ.டி-5204, டி.கே.எம்- 13, என்.எல்.ஆர்-34449, ஏ.டி.டி-39, ஏ.டி.டி-38, ஏ.டி.டி-40, ஏ.எஸ்.டி-19, ஜே.சி.எல்-1798, கோ.ஆர்-50 என 3,550 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இதில் அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் 670 டன், அனுமதி பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்களில் 2,685 டன் நெல் விதைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது
இது மட்டுமின்றி கூட்டுறவு வேளாண் சங்கங்கள் மூலமும் விதைகள் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது 320 டன் விதைகள் இருப்பு உள்ளது.நடப்பு ஆண்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் முன்பட்ட சம்பா சாகுபடி பணிகள் துவங்கியது. இதுவரை 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதில், சம்பா மசூரி (அ) பி.பீ.டி-5204 ரக நெல் 70 சதவீதம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நேரடி நெல் விதைப்பு மூலம் 70 ஆயிரத்து 150 ஏக்கரும், நாற்று விட்டு நடவுப் பணி 1 லட்சத்து 37 ஆயிரத்து 500 ஏக்கரிலும் நிறைவடைந்துள்ளன. ஓரிரு வாரங்களில் 100 சதவீதம் சாகுபடி பணி முடிந்துவிடும்.
மேலும் படிக்க