தரமான விதைத்தேர்வே மகசூல் வெற்றிக்கு வழிகாட்டும். நெற்பயிரில் விதை தேர்வும் விதைநேர்த்தி முறைகளும் தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமான பதர்களை நீக்குவதற்கு உப்புக்கரைசல் முறையை பயன்படுத்தலாம்.
விதைத் தேர்வு (Seed Selection)
பாத்திரத்தில் விதைகள் மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி ஒரு கோழிமுட்டையை மெல்ல சேர்க்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக உப்பு சேர்த்து முட்டை மேலே மிதக்க ஆரம்பித்தவுடன் முட்டையை எடுத்து விட்டு தண்ணீருள்ள மற்றொரு பாத்திரத்தில் விதைகளை கொட்ட வேண்டும். தரமான விதைகள் நீரில் மூழ்கி விடும். இவற்றின் உப்புத்தன்மை நீங்கும் வரை 3 முறை கழுவ வேண்டும்.
மூன்றுவித பரிசோதனைகளின் மூலம் முளைப்புத்திறனை விவசாயிகள் நேரடியாக பரிசோதிக்கலாம். வெள்ளைத் துணியில் ஒரு கைப்பிடி விதைகளை கட்டி 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து அடுத்த ஒருநாள் முழுவதும் இருட்டறையில் வைக்க வேண்டும். 3 ஆம் நாளில் எத்தனை விதைகள் முளைத்துள்ளது என்பதை பார்க்க வேண்டும். 2வது பரிசோதனையில் விதைகளை ஒருநிமிடம் தண்ணீரில் மூழ்க விட வேண்டும். வைக்கோலை திரித்து பாய் போல் செய்து விதைகளை பாயின் இடையில் வைத்து சுருட்டி கட்ட வேண்டும்.
24 மணி நேரம் கழித்து முளைத்த விதைகளை கணக்கிட வேண்டும். 3வது பரிசோதனையில் ஈரமான சாக்குப்பையை மடித்து விதைகளை மடிப்புக்கு இடையே வைத்து ஒருநாள் முழுவதும் இருட்டறையில் வைத்து மறுநாள் முளைப்புத்திறனை கண்டறிய வேண்டும்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை விதைப் பரிசோதனை நிலையத்தில் விதைகளின் முளைப்புத்திறன் பரிசோதனை செய்வதற்கு கட்டணம் ரூ.80.
தொடர்புக்கு
மகாலட்சுமி, விதைப்பரிசோதனை அலுவலர்
ராமலட்சுமி, கமலாராணி, வேளாண் அலுவலர்கள் விதைப் பரிசோதனை நிலையம்
நாகமலை, புதுக்கோட்டை,
மதுரை
94873 48707
மேலும் படிக்க