பருவமழையைப் பயன்படுத்தி விவசாயிகள் விதைகளை விதைப்பதற்கு முன்பு விதைப் பரிசோதனை செய்வது மிக மிக அவசியம் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கைகொடுத்தப் பருவமழை (Monsoon)
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பருவமழை பெய்து வருவதால், சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. எனவே விவசாயிகள் விதைப்பதற்கு முன் விதை பரிசோதனை செய்து விதையின் தரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
திருச்சி மாவட்டத்தில் நெல், சோளம், கம்பு, மக்காச்சோளம், பயறுவகை பயிர்கள், பருத்தி மற்றும் எண்ணெய் வித்து பயிர்களான எள், நிலக்கடலை போன்றவை அதிக அளவிலானப் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தரமான விதை (Quality seed)
தரமான விதைகள் மூலமே சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரித்து அதிக மகசூல் எடுக்க முடியும். இதனால் குறைந்த தரம் உடைய விதைகளை நடவு செய்வதன் மூலம் ஏற்படும் இடர்பாடுகளை குறைக்கலாம்.
தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருச்சி, விதை பரிசோதனை நிலையத்தில் விதைகளின் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன், பிறரகக் கலப்பு ஆகிய நான்கு பரிசோதனைகள் செய்யப் படுகின்றன. இங்கு விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் மட்டுமின்றி விவசாயிகளும் தங்களிடம் உள்ள விதையின் தரத்தை பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம்.
முளைப்புத்திறன்
விதையின் முளைப்புத் திறனை தெரிந்து கொண்டு விதையளவை முடிவு செய்யலாம். விதையின் ஈரப்பதத்தை தெரிந்து கொண்டு சரியான ஈரப்பதத்தில் விதையினை சேமித்து வைக்கும் போது பூச்சி நோய் தாக்குதல் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
கலப்பு
பிற ரகக் கலப்பு பரிசோதனையின் மூலம் வேறு ரக விதைகள் கலந்துள்ளதா என தெரிந்து கொண்டு விதையின் தரம் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நல்ல விதையை தேர்வு செய்துகொள்ளத் தங்களிடம் உள்ள விதைகளை பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
மாதிரி அளவு
எனவே விவசாயிகள் தங்கள் சாகுபடிக்கான விதைக் குவியலில் இருந்து மாதிரி விதைகளைக் குறைந்தபட்சமாக நெல்-50 கிராம், உளுந்து, பாசிப்பயிறு- 100கிராம், நிலக்கடலை, மக்காச்சோளம்-500 கிராம், எள், ராகி- 25 கிராம் என்ற அளவில் எடுத்து வந்து விதை பரிசோதனை நிலையத்தில் நேரில் கொடுக்க வேண்டும்.
திருச்சி விதை பரிசோதனை நிலையத்தில் இதுவரை 3,149 மாதிரிகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு 234 விதை மாதிரிகள் தரமற்றது என கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வுக் கட்டணம்
விதைகளின் தரம் பற்றி அறிந்து கொள்ள ஒரு விதை மாதிரிக்கு ஆய்வு கட்டணமாக ரூ.30/- மட்டுமே செலுத்த வேண்டும். எனவே, அதிக மகசூல் பெற, விதைக்கும் முன்பு, விதைகளைப் பகுப்பாய்வு செய்து தரமான விதைகளைப் பயன்படுத்தி விதைத்திட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்
மனோன்மணி
விதை பரிசோதனை அலுவலர்
திருச்சி
மேலும் படிக்க...
இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!
சம்பா பயிர் காப்பீடு - விவசாயிகளுக்கு அழைப்பு!