பயறு வகைகளில் தரமான விதை தயாரிப்புக்கு மூலவிதையின் தரமே, முக்கிய காரணியாக விளங்குகிறது. மகசூலை அதிகரிப்பதில் விதைப் பாதுகாப்பும், விதையைக் கையாளும் முறையுமே முக்கிய பங்காற்றி வருகிறது. விதைப் பாதுகாப்பிற்குத் தேவையான சில ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளை அறிந்து கொள்வோம்.
ஆலோசனைகள்
விதையின் முக்கியத்துவத்தை விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில், கடந்த 60 வருடங்களாக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, விதை பெருக்கம் (Seed multiplication) செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில், தரமான விதைகளை (Seed) விவசாயிகள் தேர்வுசெய்து பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். அதிக மகசூலுக்கு (Yield) விதையே மூலாதாரமாக விளங்கி வருகிறது. இதனால், விதையின் தேவை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே, விவசாயிகள் தரமான விதை தயாரிப்பு தொழில்நுட்பங்களை (Seed preparation technologies) அறிந்து, வேளாண். விஞ்ஞானிகளின் ஆலோசனையுடன் பயறுவகைகளின் விதை உற்பத்தியில் (Seed production) ஈடுபடலாம். இதன்மூலம், குறைந்தநாளில், நிறைய லாபத்தை விவசாயிகள் ஈட்டமுடியும்.
விதை உற்பத்தி
விதை உற்பத்தி என்பது வேளாண் பயிர் உற்பத்தி தொழில்நுட்பங்களில் இருந்து மிகவும் மாறுபட்டது. விதை உற்பத்தியானது விதைப்பு முதல் அறுவடை (Harvest) வரையிலும் உயரிய தொழில்நுட்பங்களை கையாளுவதுடன் தகுந்த ஆய்வாளர்களின் மேற்பார்வையுடன் விதை உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
நிலம் தயாரிப்பு
பயறுவகை விதை உற்பத்திக்கு நிலம் நன்கு புழிதியாக உழவு செய்யப்படவேண்டும். பயிர்களின் ரகத்துக்கேற்ப செடிக்குச் செடி 15 செ.மீ இடைவெளியும் பாருக்குப் பார் 45 செ.மீ. இடைவெளியும் அவசியம் வேண்டும். பயறுவகைக்கு ஏக்கருக்கு அடியுரமாக தொழுஉரம் 5 டன், யூரியா (Urea) 20 கிலோ, சூப்பர்பாஸ்பேட் (Superphosphate) 60 கிலோ, பொட்டாஷ் 10 கிலோ இடவேண்டும். உரத்தை பார்களின் பக்கவாட்டில் போடவேண்டும்.
விதைநேர்த்தி
விதை சான்று பெற்றதாக இருக்க வேண்டும். உளுந்து, பாசிப்பயறு ஏக்கருக்கு 8 கிலோ, ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி இமிடாகுளோபிரிட் (Imidacloprid) மருந்தைக் கொண்டு ஒருமித்த விதை நேர்த்தி செய்தால், விதை முளைத்த பின்னர் தெளிக்க வேண்டிய பூச்சிக்கொல்லி மருந்தை தவிர்க்கலாம்.
நீர் மேலாண்மை
விதைப்புடன் நீர் விட வேண்டும். பின்னர் மூன்றாம்நாள் உயிர் நீர் விட வேண்டும். பிறகு மண்ணின் நீர் செழிப்புக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும், ஈரப்பதம் பேணும் வகையில் நீர்பாய்ச்ச வேண்டும். களை கட்டுப்பாட்டுக்கு 15 நாளில் ஒருமுறையும் அடுத்த 15 நாளில் மற்றொரு முறையும் களையெடுக்கவேண்டும்.
பயிர்ஊக்கி
பயறுவகைச் செடிகளில் பூக்கள் அதிகம் உதிர்ந்துவிடும். இதனால், உற்பத்தி குறைவு ஏற்படும். இதைதவிர்க்க பூ பூக்கும் தருணத்தில் லிட்டர் நீருக்கு 4 மில்லி அளவில் பிளோனோபிக்ஸ் (Phlonopics) என்ற பயிர்வளர்ச்சி ஊக்கியை செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்கவேண்டும்.
தகவல்: உழவரின் வளரும் வேளாண்மை
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க