நாம் உயிர் வாழ உணவு அவசியம். உணவு இல்லையேல் உயிரில்லை. அத்தகைய உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தலைசிறந்த வழிகாட்டுதல்களை அளிக்கவும், அல்லும் பகலும் அயராது மேற்கொள்ளும் தன்னிகரில்லா ஆராய்ச்சிகள் மூலம், ஆகக் சிறந்த பயிர் ரகங்களை கண்டுபிடித்து தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (Tamil Nadu Agricultural University)
அண்மைகால ஆராய்ச்சியின் பயனாக, ஒரே நேரத்தில் முதிர்ச்சி அடையும்
பாசிப்பயிறு கோ-8 ரக (GREENGRAM Co-8) சாகுபடியில் வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பொதுவாக பயிறு வகைகளைப் பியிரிடும்போது, பயறு அனைத்தும் ஒரே நேரத்தில் முதிர்ச்சி அடைவதில்லை. சுமார் 20 நாட்கள் இடைவெளியில் அவை முதிர்ச்சி அடைவதால், விவசாயிகள் ஓரிரு மாதங்கள் காத்திருந்து அவற்றை சேமிக்க வேண்டிய நிலை உள்ளது. விவசாயிகளின் இந்த பிரச்சனைக்குத், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தற்போது தீர்வு கண்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாசிப்பயறு சுமார் 1.89 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு ஆண்டுக்கு சுமார் 1.21 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.சராசாரியாக மகசூல் எக்டருக்கு 642 கிலோவாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக ஒரே சமயத்தில் காய்கள் முதிர்ச்சியடையும் தன்மை கொண்ட பாசிப்பயறு இரகத்தை உருவாக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயறுவகைத் துறையிலிருந்து கோ 8 என்ற இரகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
சிறப்பு அம்சம் (Special feature of Green gram Co-8)
குறுகிய வயது
-
ஒரே சமயத்தில் காய்கள் முதிர்ச்சி அடையும் தன்மை
-
இயந்திர அறுவடை செய்ய ஏற்ற இரகம்
-
மஞ்சள் தேமல் மற்றும் நுனிக்கருகல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புசக்தி உடையது.
-
அசுவிணி மற்றும் தண்டுஈ தாக்குதலைத் தாங்கி வளரக்கூடியது.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நல்ல புழுதி கிடைக்கும் வரை நன்றாக உழ வேண்டும். கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட வேண்டும்.
விதை அளவு
-
தனிப்பயிர் சாகுபடிக்கு - ஏக்கருக்கு 8 கிலோ
-
ஊடுபயிர் சாகுபடிக்கு - ஏக்கருக்கு 4 கிலோ
-
இடைவெளி - 30 முதல் 10 செ.மீ.
விதை நேர்த்தி
1 கிலோ விதையுடன் ட்ரைக்கோடொர்மா விரிடி 4 கிராம் அல்லது பேசிலஸ் 10 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்யவும். 24 மணி நேரம் கழித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் சி.பி.ஆர்.9 (ஏக்கருக்கு ஒரு பாக்கெட் வீதம்) பாஸ்போ பாக்டீரியா (ஏக்கருக்கு ஒரு பாக்கெட் வீதம்) மற்றும் பி.ஜி.பி.ஆர் (ஏக்கருக்கு ஒரு பாக்கெட் வீதம்) நுண்ணுயிரி உரத்துடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
உரம்
மானாவரிப்பயிர்
5கிலோத் தழைச்சத்து (11 கிலோ யூரியா) 10 கிலோ மணிச்சத்து (63 கிலோ சூப்பர்) 5 கிலோ சாம்பல்சத்து (8 கிலோ பொட்டாஷ்) 4 கிலோ கந்தகச்சத்து (23 கிலோ ஜிப்சம்) (Fertilizers)
இறவைப்பயிர்
10 கிலோ தழைச்சத்து (22 கிலோ யுரியா) 20 கிலோ மணிச்சத்து (125 கிலோ சூப்பர்)10 கிலோ சாம்பல்சத்து (16 கிலோ பொட்டாஷ்) 8 கிலோ கந்தகச்சத்து (43 கிலோ ஜிப்சம்)
இலைவழி நுண்ணுட்டம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தின் பயறு ஒன்டர்க் கரைசலை 1 சதம் (10 கிராம் லிட்டர்) ஏற்ற அளவில் நன்கு பூக்கும் பருவத்தில் தெளித்து விளைச்சலை அதிகரிக்கச் செய்யலாம்.
நீர் நிர்வாகம்
இறவைப் பயிருக்கு விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்சவும். (Water Management) மூன்று நாட்கள் கழித்து உயிர் தண்ணீர் அவசியம் விட வேண்டும். பிறகு மண்ணின் தன்மைக்கேற்க நீர்ப்பாசனம் செய்யவும்.
களை நிர்வாகம்
விதைத்த மூன்றாம் நாள் மண்ணில் ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரு ஏக்கருக்கு பென்டிமெத்தலின் 30 இ.சி. என்ற களைக்கொல்லி மருந்தை ஒரு லிட்டர் அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவும். இதனைத் தொடர்ந்து விதைத்த 20 ஆம் நாள் ஒரு கைக்களை எடுக்க வேண்டும்.
பயிர்ப்பாதுகாப்பு
தண்டு வெள்ளை ஈ மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்க 5 மி.லி. இமிடாக்குளோப்ரிட் மருந்துடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
காய்த்துளைப்பானின் தாக்கதல் பொருளாதார சேத நிலையைவிட அதிகமிருப்பின் 5 சத வேப்பங்கொட்டைச் சாறு (அல்லது) இன்டாக்ஸாகாரிப் ஏக்கருக்கு 133 மி.லி. தெளித்து கட்டுப்படுத்தலாம்.
வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் 1 கிராம் கார்பன்டாசிம் என்ற அளவில் கரைத்து செடியின் வேர்ப்பாகம் நனையுமாறு ஊற்ற வேண்டும்.
மஞ்சள் தேமல் நோயைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மீதைல்டெமடான் (அ) டைமீதோயோட் பூச்சிக்கொல்லி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மி.லி. என்ற அளவில் கலந்து விதைத்த 10 ம் நாளில் தெளிக்கவும். விதைத்த 20 நாளில் நோய்தாக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி அழித்து விட வேண்டும்.
அறுவடை
இந்த இரகத்தின் காய்கள் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடைவதால், காய்கள் முற்றியவுடன் செடியுடன் அறுவடை (harvesting) செய்து காயவைத்து பின்பு அடித்து விதைகளை பிரித்து எடுக்கலாம்.
சேமிப்பு
அறுவடை செய்த விதைகளை 10 சதவீத ஈரப்பதத்திற்கு வரும் வரை காய வைக்க வேண்டும். சேமிப்பின் போது வண்டுகள் தாக்காமலிருக்க 100 கிலோ விதையுடன் 1 கிலோ வேப்ப எண்ணை (அல்லது) ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணுடன் கலந்து சேமித்து (Store) வைக்கலாம்.
விதைகள் கையிருப்பு
தற்போது 2000 கிலோ சான்று விதைகள் (Seeds) கையிருப்பில் உள்ளன. எனவே பாசிப்பயறு கோ 8 இரகத்தினை மேற்கண்ட தொழில் நுட்பமுறைகளை பயன்படுத்தி சாகுபடி செய்து விவசாய பெருமக்கள் அனைவரும் பயிரிட்டு நல்ல விளைச்சல் மற்றும் வருமானம் பெறலாம்.
மேலும் பயறுவகைபயிர்கள் விதையிருப்பு, சாகுபடி மற்றும் புதிய இரகங்கள் பற்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள விவசாயிகள்,
முனைவர் பி. ஜெயமணி,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
முனைவர் ஆ. முத்துசுவாமி
பயறுவகைத் துறை பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரை அணுகலாம்.
மேலும் 0422 2450498 என்ற தொலைபேசியிலும் அணுகி தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். pulses@tnau.ac.in என்ற மின்னஞ்சலிலும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!
ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு