பண்டையத் தமிழர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓர் உணவு என்றால் அது சிறுதானியங்கள் தான். எண்ணற்ற சிறுதானியங்களை பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வை மேற்கொண்டனர். சிறுதானியங்களை பொறுத்தவரை உழுபவர்களுக்கும், உண்பவர்களுக்கும் நன்மை தரும் என்பதால் பண்டை காலங்களில் அதிக அளவில் சாகுபடி செய்தனர். வறட்சியை தாங்கி வளரும் என்பதால் வரகு பயிரிட வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
வரகு பயிரிட விரும்பும் விவசாயிகள் கோ 3, ஏ.பி.கே 1 ஆகிய ரகங்ககளை சாகுபடி செய்யலாம். அனைத்து வகை மண்ணிலும் சிறப்பாக வளரும். குறிப்பாக, களர் மண்ணில் கூட விளையும் தன்மையுடையது. மண் அதிக ஈரம் இல்லாமல், புட்டுப்பதத்தில் இருக்கும் போது, மரக்கலப்பை கொண்டு 2 முறை நன்கு ஆழமாக உழுது நிலத்தை சமன் செய்ய வேண்டும். மழை பெய்து முடிந்த பிறகு, உழுது சாகுபடியை தொடங்கலாம்.
விதை நேர்த்தி
அசோஸ்பைரில்லம் 600 கிராம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 600 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்து பின், விதைப்பு செய்ய வேண்டும். பரவலாக விதைப்பதாக இருந்தால் ஹெக்டேருக்கு 14 கிலோ வரை விதைக்க வேண்டும். கை விதைப்பு முறைக்கு ஹெக்டேருக்கு 12.5 கிலோ விதை பயன்படுத்த வேண்டும். விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பு செய்தால் ஹெக்டேருக்கு 10 கிலோ விதை பயன்படுத்த வேண்டும். வரிசைக்கு வரிசை 22.5 சென்டிமீட்டர் 10 சென்டிமீட்டர் இடைவெளியும் இருக்க வேண்டும்.
ஒரு ஹெக்டேர் நிலத்தில் 12.5 டன் மக்கிய தொழு உரத்துடன் 10 பொட்டலங்கள் அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலங்கள் பாஸ்ப்போபாக்டீரியா ஆகிய நன்மை தரும் உயிர் உரங்களை கலந்து கடைசி உழவின் போது பரப்பி உழ வேண்டும். ஹெக்டேருக்கு 44:22 என்ற விகிதத்தில் தழைச்சத்து மற்றும் மணிச்சத்துக்களை கலந்து இட வேண்டும். ஈரப்பதம் இருப்பதைப் பொருத்து, 7 முதல் 10 நாட்களில் முளைப்பு எடுத்துவிடும்.
விதைத்த 5 மாதங்களில் கதிர்கள் நன்கு காய்ந்து முற்றி அறுவடைக்கு தயாராகி விடும். பின் தானியங்களை பிரித்தெடுத்து நன்றாக காயவைத்து, சுத்தம் செய்து சேமித்து வைக்க வேண்டும். சாகுபடி சார்ந்த பிற தகவல்களை பெற விவசாயிகள் உதவி வேளாண் அலுவலர் அலுவலகத்தை அணுகலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.