மண் வள அட்டை திட்டத்தின் முக்கிய நோக்கம் மண்வளம் மற்றும் அதன் மண்ணின் ஊட்டச்சத்து குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குகிறது. ஆனால், இன்றளவும் பல விவசாயிகள் மத்தியில் இத்திட்டம் சரியாக சென்றடையவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.
மண் அட்டை வழங்கும் திட்டம் எப்போது தொடக்கம்?
சர்வதேச மண் ஆண்டு 2015- ஆம் கொண்டாடப்பட்ட வேளையில், நாட்டில் உள்ள ஒவ்வொரு விளை நிலத்திலும் அவற்றின் ஊட்டச்சத்து தன்மையை ஆராய்வதற்காக பிரத்யேகமான மண் வள அட்டை வழங்கும் திட்டத்தை அதே ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி ராஜஸ்தானின் சூரத்கரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மண் வள அட்டையின் அடிப்படை நோக்கம்:
இன்றளவும் விவசாயிகள் மண்ணின் தன்மை அறியாது, அதிகளவு உரத்தினை தெளிப்பது/ பயன்படுத்துவதினால் மண்ணின் தன்மை கெடுகிறது. மேலும் அதிகளவிலான இராசயன உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதை தடுக்கவே மண்வள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் நமது நிலத்தில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்ப, உரத்தினை பயன்படுத்தினால் போதும் நல்ல விளைச்சலும் பெற இயலும், மண்ணின் தரமும் கெடாமல் பாதுகாக்க இயலும்.
மண் வள அட்டையில் என்ன இருக்கும்?
ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் என்றாலும், இது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வேளாண்மை உழவர்நலத்துறையினால் இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மண் வளத்தினை பரிசோதனை செய்ய நினைக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் உள்ள மண்ணை அருகிலுள்ள வேளாண் அறிவியல் மையத்திற்கு கொண்டு சென்று பரிசோதிக்கலாம். அல்லது அங்குள்ள வேளாண் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிப்பின் அவர்களே நிலத்திற்கு நேரிடையாக வந்து நிலத்தின் மண்ணை சோதனைக்கு எடுத்து செல்லும் வழக்கமும் உள்ளது.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மண் வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. மண்ணை பரிசோதனை செய்து பெறப்படும் சத்துகள் விவரம் முறையே,
பேரூட்டச் சத்துகள்:
தழைச்சத்து (யூரியா), மணிச்சத்து (சூப்பர் பாஸ்பேட்), சாம்பல் சத்து (மியூரியேட் ஆப் பொட்டாஷ்) ஆகியவற்றின் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை குறிப்பிட்டு இருப்பார்கள்.
நூண்ணூட்டச்சத்துகள்:
இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான் ஆகியவற்றின் மதிப்பு குறிப்பிடப்படும்.
மேற்குறிப்பிட்ட சத்துகள் மண்ணில் எவ்வளவு உள்ளது என்பதனை பொறுத்து நிலத்தில் எந்த வகையான உரத்தை எவ்வளவு விகிதத்தில் பயன்படுத்த வேண்டும் என உரப்பரிந்துரை குறிப்பும் மண வள அட்டையில் இடம்பெறும்.
தொடர்ச்சியாக மண் வள பரிசோதனைகளை மேற்கொள்ளுவது, மண்ணின் தன்மை எந்தளவிற்கு கெட்டுள்ளது அல்லது மேம்பட்டுள்ளது என்பதை கண்டறிய எளிய வழியாகும்.
19 பிப்ரவரி 2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தரவுகளின் படி 23 கோடிக்கும் மேற்பட்ட மண் வள அட்டைகள் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 11,500 புதிய மண் பரிசோதனை ஆய்வகங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
மண் வள அட்டை இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் பரவிய நிலையில் அரசின் சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விவசாயிகள் தங்களது மண்ணின் தரத்தை மேம்படுத்த மண் வள பரிசோதனை மேற்கொள்ளுவது அவசியம் என்பதை நினைவில் கொள்க.
மேலும் காண்க: