கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள ஐ.சி.ஏ.ஆர்- மத்திய கிழங்கு வகைப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முனைவர்கள் எம்.எல்.ஜீவா மற்றும் ஹெச்.கேசவ குமார் ஆகியோர் சமீபத்தில் வெப்பமண்டல கிழங்கு வகை பயிர்களைத் தாக்கும் முக்கியமான நோய்கள் மற்றும் பூச்சிகளின் மேலாண்மை முறைகள் குறித்து நமது கிரிஷி ஜாக்ரான் தமிழ் இதழில் சிறப்பு கட்டுரை ஒன்றினை வெளியிட்டு இருந்தனர்.
வாசகர்களின் பாரட்டினைப் பெற்ற அக்கட்டுரையில், மரவள்ளிக்கிழங்கில் ஏற்படும் தேமல் நோய், மரவள்ளிக்கிழங்கில் தண்டு மற்றும் வேர் அழுகல் பிரச்சினைக்கான காரணம், அறிகுறி அதற்கான நோய் மேலாண்மை குறித்தும் குறிப்பிட்டு இருந்தனர். அவற்றின் தகவல்கள் பின்வருமாறு-
கிழங்குவகைப் பயிர்களில் உள்ள முக்கிய உயிரியல் பிரச்சனைகளில் பூச்சிகள், நோய்கள் மற்றும் நூற்புழுக்கள் பயிர் உற்பத்தி பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மரவள்ளிக்கிழங்கு தேமல் நோய்:
இந்த நோய் 88 சதவிகிதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் அல்லது வெளிர்பச்சை நிறமாக மாறி, முறுக்கப்பட்டு, காலணி சரம் போன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன.
மேலாண்மை முறைகள் என்ன?
- ஸ்ரீ ரெக்ஷா, ஸ்ரீ சுவர்ணா, ஸ்ரீ சக்தி போன்ற எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்களை சாகுபடி செய்தல்.
- வைரஸ் இல்லாத வளர்நுனி திசு வளர்ப்பு செடிகளை பயன்படுத்துதல்.
- ஒற்றை/இரண்டு முனை குச்சிகளை நாற்றங்காலில் வளர்ப்பது, முக்கிய வயலில் நாற்று நடுவதற்கு முன் பாதிக்கப்பட்டவற்றை அகற்ற உதவும்.
- நோய் பரப்பும் வெள்ளை ஈஐ கட்டுப்படுத்த இமிடாக்ளோபிரிட் 17.8 எஸ்எல் (0.3 மிலி/ லிட்டர்) அல்லது தியாமெதாக்சம் 25 டபிள்யூ.ஜி. (0.3-0.4 கிராம்/ லிட்டர்) 14 நாட்கள் இடைவெளியில் தெளித்தல்.
மரவள்ளிக்கிழங்கு தண்டு மற்றும் வேர் அழுகல்
மரவள்ளி செடியில் தண்டு மற்றும் வேர் அழுகல் நோய் 2019 முதல் கேரளாவில் பல இடங்களில் காணப்படுகிறது. இந்நோய் நன்செய் வயல்களில் நடப்பட்ட மரவள்ளி செடிகளில் மட்டுமே காணப்படுகிறது. இந்நோயின் தீவிரத்தைப் பொறுத்து 10 முதல் 100% மகசூல் இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இலைகள் மஞ்சள் நிறமாகி, காய்ந்து, கிழங்கு மற்றும் தண்டின் வெளிப்புறம் கருமையாகி விடும்.
மேலாண்மை முறைகள்
- இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொருத்தமான பயிர்களுடன் பயிர் சுழற்சியை மேற்கொள்ளவும்.
- மண்ணின் அமிலத்தன்மை 4-5 உள்ள பகுதிகளில், நடவு செய்வதற்கு முன் ஒரு செடிக்கு 150-200 கிராம் என்ற விகிதத்தில் சுண்ணாம்பு இடவும் (சுண்ணாம்பு இடும் போது மண்ணின் ஈரப்பதத்தை உறுதி செய்யவும்)
- கிழங்கு அழுகல் நோய்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது போல ட்ரைக்கோடெர்மா உபயோகிக்கவும்.
- நடவுப்பொருட்களை கார்பன்டாசிம் 50 டபிள்யூ.பி. பூஞ்சாணக்கொல்லியில் (லிட்டருக்கு 1 கிராம்) 10 நிமிடம் நேர்த்தி செய்து நடவும். கடுமையான நோய் ஏற்பட்டால் 15 நாட்களுக்கு ஒருமுறை, செடியின் அடிப்பகுதியை சுற்றி கார்பன்டாசிம் மூன்று முறை ஊற்றவும்.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், முனைவர் எம்.எல்.ஜீவா (முதன்மை விஞ்ஞானி- ஜ.சி.ஏ.ஆர்-மத்திய கிழங்கு வகை பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம்,கேரளா) அவர்களை மின்னஞ்சல் வாயிலாக தொடர்புக் கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி: jeeva.ml@icar.gov.in
Read also:
வெற்றிலை வள்ளி கிழங்கில் உயிர் வலுவூட்டல்- மறைந்திருக்கும் பயன்கள்