தமிழக சட்டப்பேரவையில், வேளாண்மை உழவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது புதிதாக 29 அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார்.
அதில் டிராகன் பழ உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்தல், உருளைக்கிழங்கு சாகுபடியினை ஊக்குவிக்க இடுப்பொருட்களுக்கு மானியம் வழங்குதல் போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரங்களுடன், மற்ற அறிவிப்பின் விவரம் பின்வருமாறு.
டிராகன் பழத்தின் உற்பத்திக்கு முக்கியத்துவம்:
அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த டிராகன் பழச் சாகுபடித் தொழில்நுட்பங்கள், தரமான நடவுச் செடிகள், மகசூல், நிறம், சுவை, பழங்களின் எடை, சத்துகள் போன்ற அனைத்துத் தகவல்களையும் விவசாயிகள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் 2024-25 ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூர் அரசுத் தோட்டக்கலைப் பண்ணையில் டிராகன் பழத்திற்கான செயல்விளக்கத்திடல் 25 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
உருளைக்கிழங்கு சாகுபடி-இடுபொருட்களுக்கு மானியம்
தமிழ்நாட்டில் உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரித்திட 2024-25 ஆம் ஆண்டில் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் மட்டுமல்லாது உருளைக்கிழங்கு சாகுபடிக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை கொண்ட ஈரோடு மாவட்டம் தாளவாடி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் விவசாயிகளுக்கு விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்பட்டு உருளைக்கிழங்கு சாகுபடி ஊக்குவிக்கப்படும். இதற்கென 20 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
உயிர்ம வேளாண்மை-விதைகள் உற்பத்தி
தமிழ்நாட்டில் சிறுதானியங்கள், பயறுவகைகளில் உயிர்ம வேளாண் சாகுபடியினை விவசாயிகளிடையே ஊக்கப்படுத்தும் வகையில் 2024-25 ஆம் ஆண்டில் அரசு விதைப் பண்ணைகளில் 20 ஏக்கரில் உயிர்ம வேளாண் முறையில் சிறுதானியங்கள், பயறு வகைகளின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு சான்றுநிலை விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கென ஐந்து இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு செயல்முறை அனுபவம்
வேளாண் கல்வி பயிலும் மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை சாகுபடி மேலாண்மை அனுபவங்களை நேரில் கற்றிடும் வாய்ப்பினை ஏற்படுத்துவதும் அவசியமாகிறது. உழவரும், வேளாண் மாணவரும் ஒருங்கே பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 4 ஆம் ஆண்டு பயிலும் 5,000 வேளாண்மை, தோட்டக்கலை மாணவர்களுக்கு செயல்முறை அனுபவம் ஏற்படுத்தப்படும்.
உழவர் செயலியில் கூடுதல் விவரங்கள் பதிவேற்றம்
விவசாய நிலங்களைச் சமன் செய்வதற்கும், முட்புதர்களை அகற்றி தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவதற்கும், கரும்பு அறுவடை செய்வதற்கும், உரக்கலவை, களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி ஆகியவற்றைப் பயிர்களின் மீது நேரடியாகத் தெளிப்பதற்கும், ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கும், விவசாயிகளுக்குக் குறித்த காலத்தில் பணி மேற்கொள்வதற்கு உதவிடும் வகையில் தனியாருக்குச் சொந்தமானமண் அள்ளும் இயந்திரங்கள், கரும்பு அறுவடை செய்யும் இயந்திரங்கள், டிரோன்கள், விசைத்துளைக் கருவிகள் ஆகியவற்றின் உரிமையாளர் பெயர், முகவரி, அலைபேசி எண் போன்ற விவரங்கள் வட்டாரம், மாவட்ட வாரியாக உழவர் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.
அரசுத் திட்டங்கள்- அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் விழிப்புணர்வு முகாம்கள்
இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டம், நவீன வேளாண் இயந்திரங்களின் பயன்பாடு, இ வாடகை, முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், விவசாயிகளுக்கு மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட் வழங்குதல், சிறுதானிய இயக்கத்தின் கீழ் தரிசு நில மேம்பாடு போன்ற அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், வேளாண்மைப் பொறியியல் தொழில் நுட்பங்கள் குறித்தும் விவசாயிகள் எளிதில் அறியும் வகையில் 2024-25 ஆம் ஆண்டில் 388 ஊராட்சி ஒன்றியங்களிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.
Read also: மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு!
அனைத்து மாவட்டங்களிலும் "ஏற்றுமதி ஆலோசனை " மையம்:
வேளாண் விளைபொருட்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள், அவற்றின் தரம், மதிப்புக் கூட்டுதல், ஏற்றுமதி நடைமுறைகள் போன்ற பல்வேறு வழிமுறைகளை விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளவும், வேளாண், வேளாண் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியையும், ஏற்றுமதியாளர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் "ஏற்றுமதி ஆலோசனை " மையங்கள் (Export Consultancy Cell) அமைக்கப்படும்.
வேளாண் கட்டமைப்பு நிதித்திட்டத்தில் வங்கிக்கடன்
வேளாண் கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெற்று அறுவடைக்கு பிந்தைய மேலாண்மைக்கான வேளாண் கட்டமைப்புகளை உருவாக்கிடவும், தங்களது தொழிலை விரிவாக்கம் செய்திடவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது முதல் வங்கிக் கடன் பெறுவது வரையிலான அனைத்து உதவிகளும் மாவட்ட அளவிலான ஆலோசகர்கள் மூலம் ஆர்வமுள்ள விவசாயிகள், தொழில் முனைவோர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். (மற்ற அறிவிப்பின் முழு விவரங்களை தெரிந்துக் கொள்ள கிரிஷி ஜாக்ரன் வலைத்தளத்தினை காணவும்)
Read more:
ஒரே கிணறு- 50 ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம்: அசத்தும் சிவகங்கை இளைஞர்!
நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண்