ஒட்டுமொத்த டெல்லி நகரின் கழுத்தை நெரித்துவிட்டு, தற்போது நகருக்குள் வந்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறீர்களே என விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடரும் போராட்டம் (The struggle to continue)
மத்திய அரசுக் கொண்டுவந்த 3 வேளாண் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதியில் நடக்கும் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்தது. இதனையடுத்து கடந்த மாதம் 27ம் தேதி விவசாயிகள் பாரத் பந்த் நடத்தினர்.
வழக்கு (Case)
இந்நிலையில் விவசாயிகள் மற்றும் கிசான் மகா பஞ்சாயத்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 200 விவசாயிகள் சத்தியாகிரக போராட்டம் நடத்த உள்ளனர். இதற்கு அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மக்கள் மகிழ்ந்தார்களா? (Did people enjoy it?)
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், ஒட்டுமொத்த டெல்லி நகரின் கழுத்தையும் நெரித்துவிட்டு, இப்போது, நகரின் மையப்பகுதிக்குள் வந்து போராட்டம் நடத்த விரும்புகிறீர்கள். போராட்டம் நடத்திய பகுதி அருகே இருந்த மக்கள், உங்களது போராட்டத்தால் மகிழ்ச்சி அடைந்தார்களா?
நீதித்துறையை எதிர்த்து போராட்டமா? (Struggle against the judiciary?)
வேளாண் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய நீங்கள், நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நீதிமன்றம் முறையாக முடிவு எடுக்கும். நீதிமன்றம் மீது நம்பிக்கை இருந்திருந்தால், போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு, வழக்கை விரைவாக விசாரிக்க வலியுறுத்தியிருக்க வேண்டும். நீதித்துறை அமைப்பை எதிர்த்தும் போராட்டம் நடத்துகீறீர்களா?
மறுப்பு (Denial)
நெடுஞ்சாலையை மறித்த நீங்கள், போராட்டம் அமைதியாக நடந்ததாகக் கூறுகிறீர்கள். குடிமக்களும் சாலைகளில் சென்று வர உரிமை உள்ளது. அவர்களின் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. நாட்டின் பாதுகாப்பிற்கும் நீங்கள் பாதிப்பு ஏற்படுத்துகிறீர்கள். பாதுகாப்பு துறையினரையும் நீங்கள் தடுத்து நிறுத்தி உள்ளீர்கள் என அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டினர்.
இதனை தொடர்ந்து, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, நாங்கள் நெடுஞ்சாலையை மறிக்கவில்லை. போலீசார் எங்களை தடுத்துவிட்டனர் என தெரிவித்தார்.தொடர்ந்து நீதிபதிகள், நெடுஞ்சாலையை மறிக்கும் போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை என்பது குறித்து அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் படிக்க...
Bharatbandh: விவசாயிகளுக்கு ஆதரவாகப் பள்ளி கல்லூரிகள் மூடல்!