relief funds for 8 district farmers
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் முழுவிவரம் பின்வருமாறு-
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை விட கூடுதலாக ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்பட்டது. அதிகனமழையினை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை 21.12.2023 அன்று பார்வையிட்டு மிகக் கடுமையான வெள்ள பாதிப்பிற்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தார்.
முதல்வர் அறிவித்த நிவாரணத் தொகை விவரம்:
மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகப் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 17 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகச் சேதமுற்றிருப்பின், இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, 22 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகப் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410 ரூபாயிலிருந்து, 8,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டு இருந்தார்.
இதைப்போல் 33,000 ரூபாயாக இருந்த எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணத்தை 37,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், 3,000 ரூபாயாக இருந்த வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணத்தை 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு:
முதல்வர் அறிவித்த இழப்பீட்டின் படி, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 1,64,866 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கு, 1,98,174 விவசாயிகள் பயனடையும் வகையில் 160 கோடியே 42 இலட்சத்து 41 ஆயிரத்து 781 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், 38,840 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 62,735 விவசாயிகள் பயனடையும் வகையில் 41 கோடியே 24 இலட்சத்து 74 ஆயிரத்து 680 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு 201 கோடியே 67 இலட்சத்து 16 ஆயிரத்து 460 ரூபாய் நிவாரண நிதி வழங்கிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி நிவாரணத் தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read more:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகை அதிகரிப்பு!