மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 September, 2019 5:52 PM IST

தமிழ் மொழியில் எண்ணற்ற சொல்லாடல்கள் வழக்கத்தில் இருந்தன. பழமொழி, விடுகதை போன்றவை இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மழைக்கு பழமொழி, மாதத்திற்கு பழமொழி, விவசாயத்திற்கு பழமொழி என சொல்லிக் கொண்டே போகலாம். இதன் சிறப்புகள் என்னவென்றால் குறைந்த சொற்கள் கொண்ட ஒரு தொடர், நிறைந்த பொருளை  தருவது ஆகும்.

பழமொழிகளும் அதன் விளக்கங்கள்

அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல்

விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்யும்போது,  அகலமாக உழுவதை விட  ஆழமாக உழ வேண்டும்.

அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழைக்கு அச்சாரம்

மாலை வேளைகளில் ஈசல்கள் அதிகமாக சுற்றி திரிந்தால்  நீண்ட நேர மழைக்கான அறிகுறி.

ஆடிப்பட்டம் தேடி விதை

ஆடி மாதத்தில் விதைத்தல் தை மாதத்தில் அறுவடை செய்யலாம். மேலும் இந்த மாதத்தில் பயிரிட்டால் நல்ல விளைச்சலை கொடுக்கும். இதனால் தான் ஆடிப்பட்டம் தேடி விதை என்கிறார்கள்.

புத்து கண்டு கிணறு வெட்டு

பண்டைய காலங்களில் கிணறு வெட்டுவதற்கு முன்பு நிலத்தில் உள்ள நீரின் அளவை அறிய கால்நடைகளின் செயல்பாடு,  கரையான் புற்று இவற்றை கொண்டு அறிவார்கள். பொதுவாக காரையானது நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில் தான் புற்று அமைக்கும். எனவே தான் நம் முன்னோர்கள் புற்று இருக்கும் இடங்களில் கிணறு வெட்ட வேண்டும் என்பார்கள்.

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

வானம் பொய்த்து விட்டால் நிலத்தில் நீர் இருக்காது.  பயிர் விளைச்சலும் இருக்காது. மழை இல்லை என்றால் விவசாயம் பொய்த்து விடும்.

வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய்

வெள்ளம் வந்தாலும்  பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதே இதன் பொருள்.

தும்பி எட்ட பறந்தால் தூரத்தில் மழை
தும்பி கிட்டப் பறந்தால் பக்கத்தில் மழை

தும்பி என்பது தட்டான் பூச்சி ஆகும். பறக்கும்  உயரத்தை பொறுத்து மழை பொழிவை அறிவார்கள். உயரத்தில் பறந்தால் தூரத்தில் மழை,  தாழ்வான இடத்தில பறந்தால் அருகில் மழை என்று பொருள்.

காணி தேடினும் கரிசல்மண் தேடு

நிலம் வாங்கும் போது, சிறிய அளவாகவே இருந்தாலும் கரிசல் மண் உள்ள நிலமாக வாங்க வேண்டும்.  நீரினைத் தேக்கி வைக்கும்  தன்மை உடையது, விவசாயத்திற்கு ஏற்றது.

கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும், அடர விதைத்தால் போர் உயரும்

விதைகளை முறையான இடைவெளி விட்டு விதைத்தால் விளைச்சல் பெருகும்.  அதன் காரணமாக களஞ்சியம் (தானிய கிடங்கு) நிறையும். இடைவெளி இல்லாது (அடர) விதைத்தால் விளைச்சல் பயன் தராது, மாற்றாக  வெறும் வைக்கோல் (போர்)  மட்டும் உயரம்.

மழையடி நஞ்சை, மதகடி புஞ்சை

மழை நீரை மட்டும் நம்பி விவசாயம் நடைபெறும்  இடங்களில் நஞ்சை பயிர்களையும், மழை நீரை சேமித்து வைத்திருக்கும் கண்மாய், ஏரிகள் போன்றவற்றின் அருகில் புஞ்சைப் பயிர்களை பயிர் செய்யலாம்.

நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய்

பயிர் வளர்ச்சிக்கு தேவையான நிலமும், நீரும் ஓரிடத்தில் இருந்தாலும், பருவநிலையை கணக்கில் கொண்டே பயிர் செய்ய வேண்டும்.

ஆடி ஐந்தில் விதைத்த விதையும், புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர் வைத்த தனம்

பொதுவாக ஆடி ஐந்தாம் தேதி விதைத்து, புரட்டாசி பதினைந்தாம் தேதி நடவு செய்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்கள் சேமித்து வைத்த சொத்து போன்று அது நமக்கு பலன் தரும்.

பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

எந்த விதை விதைத்தாலும் பருவமறிந்து பயிர் செய்தல் நல்ல பலன் கிடைக்கும்.

காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

தண்ணீர் பாய்ச்சி நிலம் நன்றாக காய்ந்த பின் மீண்டும் தண்ணீர் விடவேண்டும்.

ஆடு பயிர் காட்டும், ஆவாரை கதிர் காட்டும்

ஆட்டுச் சாணம் பயிர் வளர்ச்சிக்கு  உதவும். ஆவாரை உரம்  தானிய முதிர்ச்சியை உண்டாக்கும்.

தவளை கத்தினால் தானே மழை

பொதுவாக மழைக்கான அறிகுறிகள் மனிதனை விட மற்ற எல்லா ஜீவா ராசிகளுக்கும் தெரியும். தவளைகள்  மழை வருவதற்கு முன்பே கத்தும்.

கோரையைக் கொல்ல கொள்ளுப்பயிர் விதை

நெல் வயல்களில் வளர்ந்துள்ள களைப் பயிரான கோரைப்புல்லை கொள்ளுப் பயிரினை கொண்டு தடை செய்யலாம்.

சொத்தைப் போல் விதையைப் பேண வேண்டும்

விவசாயி என்பவன் தன்னுடைய சொத்தை பாதுகாப்பது போல் விதைகளை பாதுகாக்க வேண்டும்.

எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல்

எறும்புகள் கூட்டம் கூட்டமாகச்  உயரமான இடத்திற்கு வாயில் முட்டையை கவ்விக் கொண்டு சென்றால் கட்டாயம் புயல் வரும் என்று பொருள்.

மார்கழி மழை மண்ணுக்கு உதவாது

பொதுவாக ஆடியில் விதைத்து தை மாதத்தில் அறுவடைக்கு காத்திருப்பார்கள். எனவே மார்கழி மாதத்தில் பயிர்கள் அறுவடைக்கு தயாராயிருக்கும் என்பதால், அந்த சமயத்தில் தண்ணீர் தேவை இருக்காது. அப்போது மழை பெய்தாலும் பயிர் விளைச்சலை பாதிக்கும். இதன் காரணமாக மார்கழி மழை மண்ணுக்கு உதவாது என்றார்கள் நம் முன்னோர்கள்.

தை மழை நெய் மழை

நெய் எவ்வாறு சிறிதளவு ஊற்றினாலே மணம், ருசியும் தரும். அதே போன்று  தை மாதத்தில் பெய்யும் சிறிதளவு மழையே என்றாலும், வேளாண்மையை மணக்கவே செய்யும்.

களர் கெட பிரண்டையைப் புதை

நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்தால், நிலமானது சிறக்கும்.

தேங்கிக் கெட்டது நிலம்; தேங்காமல் கெட்டது குளம்

விளை நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளராது. அதே போன்று குளத்தில் தண்ணீர் தேங்காவிடில் பயிர் வளர்ச்சி இருக்காது.

நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்

பசுந்தாள் போன்ற உரப்பயிர்களை வளர்த்து , அதனை அந்நிலத்திலே மடக்கி உழுது வளத்தினை அதிகரிக்க செய்ய வேண்டும்.

கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

வளமில்லாத நிலத்துக்கு வன்னி மரங்களை நட்டு வளர்த்தால்  நிலம் வளமாகும். அதே போல் வறுமை வாடும் குடும்பத்திற்கு எட்டு வெள்ளாடுகளை வளர்த்தால் வறுமை நீங்கும்.

ஆற்று வண்டல் தேற்றும் பயிரை

ஆற்று வண்டலானது எப்போதும் வளமானதாக இருப்பதால் அது பயிரின் வளர்ச்சிக்கு உதவும்.

நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு

நல்ல நிலத்தில் கொழுஞ்சியும், நடுத்தர நிலத்தில் கரந்தையும்,  தரமற்ற நிலத்தில் எருக்கச் செடியும் வளரும்.  எனவே ஒரு நிலத்தின் தன்மையை அந்நிலத்தில் இருக்கும் தாவரங்களை கொண்டு அறிந்து கொள்ளலாம்.

களரை நம்பிக் கெட்டவனும் இல்லை, மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

களர் நிலமானது தண்ணீரை தேக்கி  பயிர் வளர்ச்சிக்கு உதவும். மணலானது தண்ணீரை வடித்து விடுவதால் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.

கூளம் பரப்பி கோமியம் சேர்

கூளம் எனபது  சிதைந்த வைக்கோல் ஆகும். அவற்றை பரப்பி வைத்து அதன்மீது கோமியத்தை தெளித்தால் உரம் விரைவில் சத்தானதாக மாறும்.

உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழவழ

மிளகு சேர்க்காத குழம்பு எங்கனம் பலன் அற்றதாகுமோ, அதேபோல் வேளாண் இல்லாத  நிலம் பலன் தராது.

புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு

புஞ்சை நிலத்தை நான்கு முறையும், நஞ்சை நிலத்தை ஏழு முறையும் உழவு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் மண்ணானது நன்றாக சந்தனம் போல் மையாக இருக்கும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Tamil Proverbs About Agriculture: Ancient Farming Techniques and Its Meaning
Published on: 17 September 2019, 05:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now