பருத்திக்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைப்பெறும் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் அரவைக் கொப்பரை கொள்முதலுக்கான இறுதி நாள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு அதுத்தொடர்பான நினைவூட்டல் திருவாரூர் விற்பனைகுழு செயலாளர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பான விரிவான தகவல்கள் பின்வருமாறு:
பருத்திக்கான விலை முன்னறிவிப்பு- TNAU வெளியீடு
தமிழகத்தில் பருத்திக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுத்தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டத்தின் கீழ் சேலம் மண்டலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நிலவிய பருத்தி விலை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தரமான பருத்தியின் பண்ணை விலை குவிண்டாலுக்கு ரூ.6,800 முதல் ரூ.7 ஆயிரமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்தப் பருவத்தில் விதைக்கப்பட்ட பருத்தியின் விலை வரும் ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் குவிண்டாலுக்கு ரூ.7,100 வரை கிடைக்கும். வடகிழக்கு பருவமழை, பிற மாநில வரத்தின் அடிப்படையில் விலையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். எனவே விவசாயிகள் இதற்கேற்ப விற்பனை முடிவு, விதைப்பு முடிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்- மாவட்ட ஆட்சியர் அழைப்பு
விவசாயிகளின் குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைப்பெறுவது வழக்கம். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைப்பெற உள்ளது.
இதைப்போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைப்பெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் தவறாது கலந்துக் கொண்டு தங்களது கருத்துகள் மற்றும் புகார்களை தெரிவிக்குமாறு வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரவை கொப்பரை கொள்முதல்- விவசாயிகளுக்கு நினைவூட்டல்
நடப்பாண்டில் ஒன்றிய அரசின் விலை ஆதார திட்டத்தின் கீழ், திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து அரவை கொப்பரை தேங்காயானது கடந்த ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி முடிய குறைந்த பட்ச ஆதார விலையான கிலோ ஒன்றிற்கு ரூபாய் 108.60 காசுகள்/- என்ற வீதத்தில் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக 350 டன் கொப்பரை தேங்காயினை 26.11.2023 முடிய கொள்முதல் செய்ய அரசாணை பெறப்பட்டுள்ளது . எனவே விவசாயிகள் தங்களது அரவை கொப்பரையினை விற்பனை செய்ய திருவாரூர், மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களினை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுமாறு திருவாரூர் விற்பனைகுழு செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் காண்க:
ஹெக்டருக்கு 2350 கிலோ மகசூல்- ஸ்ரீரத்னா தினை ரகம் அறிமுகம்
சுத்துப்போட்ட கனமழை- இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு உஷாரா இருங்க