தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையைக் கருத்தில்கொண்டு, குறுவை நெல்லைப் பாதுகாக்க 50% மானியத்தில் தார்பாய்கள் வழங்கப்பட உள்ளதாக வேளாண்துறை அறிவித்துள்ளது.
தொடரும் பருவமழை (Continuing monsoon)
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில், குறிப்பாகத் தென் மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனிடையே குறுவை நெல் கொள்முதல் பணிகளும் நடைபெற்று வருகிறது.
50% மானியத்தில் (50% on subsidy)
இதையடுத்து, அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்லை விவசாயிகள் பாதுகாக்க ஏதுவாக, 50 சதவிகித மானிய விலையில் தார்பாய்கள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் நடவு செய்யப்பட்ட குறுவை நெல் தற்போது அறுவடைக்கு வந்த நிலையில் தொடர் மழையாலும், விட்டுவிட்டு மழை பெய்வதாலும் நெல்லை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
தார்பாய்கள் (Tarpaulins)
எனவே, அறுவடை செய்த குறுவை நெல்லை மழையிலிருந்து பாதுகாக்க வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் மானியத்தில் விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நிகழாண்டு 1,100 தார்பாய்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு (Contact)
எனவே, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான தார்பாய்களை 50 சதவிகித மானியத்தில் பெற்று பயனடைய தொடர்புடைய வட்டாரங்களில் உள்ள வேளாண் உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
குறுவை நெல் கொள்முதல் பணிகள்- விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவு!
கட்டணம் வசூலித்தால், கல்லூரி உரிமம் ரத்து- பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!