அந்தமானில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
83% அதிகம் மழை (83% more rain)
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இயல்பை விட சராசரியாக 83 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது.
அதேநேரத்தில், தமிழகத்தில் நேற்று முதல் மழை சற்று குறைந்து வருகிறது. மேலும் 2 நாட்களுக்கு மழை குறைந்துதான் காணப்படும் என்று ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
4 நாட்களுக்கு மழை (Rain for 4 days)
தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக, அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழை (Moderate rain)
அதன்படி, இன்று (புதன்கிழமை) கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எச்சரிக்கை இல்லை (No warning)
இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தாழ்வு மண்டலம் உருவான அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 4-ம் தேதி அதிகாலை வட ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நெருங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்துக்கு கன மழைக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
ஆனால், அந்தமான் கடல் பகுதி மற்றும் அந்தமான் தீவு பகுதிகளில் இன்றும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நாளையும், சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
3.12.21 மற்றும் 4.12.21
மத்திய வங்கக்கடல் பகுதியில் 3ம் தேதியும், 4-ம் தேதியும் மத்திய, மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த நாட்களில் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல், அரபிக்கடலில் கோவா-மராட்டியம் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று தாழ்வு பகுதியாகவும் வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
உருவாகிறது 4-வது புயல் சின்னம் - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!