தென்னீரா பானம் பொருளாதார புரட்சியை ஏற்படுத்தும் என, உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாக இயக்குனர் நம்பிக்கை தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில், 'தென்னீரா' பானம் (Thenneera Drinks) அறிமுகப்படுத்தப்பட்டு, ஜனவரி 17 முதல் விற்பனைக்கு வந்தது. அதன் நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் தென்னீரா' பானம் (Thenneera Drinks) குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
தென்னீரா' பானம் (Thenneera Drinks)
நவீன தொழில்நுட்ப உதவியுடன், தென்னம்பாளையில் இருந்து தயாரிக்கப்படும் தென்னீரா பானம், முற்றிலும் கலப்படம் அற்றது. இரண்டாண்டு முயற்சியின் பயனாக, காசர்கோடு ஆராய்ச்சி நிறுவனம் வாயிலாக தென்னீரா தரம் உறுதி செய்யப்பட்டு, ஆறு மாதங்கள் வரை கெடாமல் வைத்திருக்க முடியும் என, சான்று வழங்கப்பட்டுள்ளது.
முதல் நான்கு மாதம் வரை, தென்னீராவின் தரம், மணம், சத்து, குணம் உள்ளிட்டவை மாறாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், ஜிங்க், மற்றும் இரும்பு சத்து அதிகம் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். இந்நிறுவனத்தில், 1,200க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள், 30க்கும் அதிகமான இயக்குனர்கள் உள்ளனர். பல்லடத்தில், பதப்படுத்த தேவையான குளிர்பதன கிடங்கு அமைத்து, 200 மி.லி., கொண்ட, 40 ஆயிரம் பேக்குகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
வரும் நாட்களில் போதிய குளிர்பதன கிடங்குகள் அமைப்பதன் வாயிலாக, செஞ்சேரிமலை, உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் உற்பத்தி விரிவுபடுத்தப்படும். ஏற்றுமதி தரச்சான்று பெறும் முயற்சி நடந்து வருவதால், ஓரிரு மாதங்களில் ஏற்றுமதி மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விற்பனையை துவக்கியுள்ளோம்.
பொருளாதார புரட்சி (Economic Revolution)
சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையம் எதிரில் அமைந்துள்ள என் அலுவலகத்திலும், நேரடி விற்பனை நடக்கிறது. தேவையான அளவு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட பின், சென்னையின் இதர பகுதிகள், பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களிலும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். தென்னீரா பானம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கி, வேலைவாய்ப்பை அதிகப்படுத்தி, பொருளாதார புரட்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க
காயர் பொருட்களை பிளாஸ்டிக்குக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்: ஐ.நா. ஆலோசகர் தகவல்!
தென்னையை பாதுகாக்கும் பச்சை இறக்கை பூச்சி: விவசாயிகளுக்கு விற்பனை!