கோடை காலம் நெருங்கிவிட்டநிலையில், வெப்பத்தைத் தணிக்க உதவும் இளநீரை, வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். இதனால் தென்னை விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், ஒரு லட்சத்து, 45 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. இதில், இளநீர் சாகுபடிக்கான, வீரிய ஒட்டுரக தென்னை, 3.2 லட்சம் மரங்கள் உள்ளன.பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை தாலுகா பகுதிகளில் சாகுபடியாகும் இளநீர் சென்னை, மதுரை, சேலம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி உள்பட தமிழகம் முழுவதிலும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
பிற மாநிலங்களுக்கும் (To other states)
அதேபோல், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் பகுதிகளுக்கும் விற்பனைக்காகக் கொண்டுசெல்லப்பபடுகிறது.இந்நிலையில், நாடு முழுவதிலும் வெயில் வாட்டி வதைப்பதால், இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளது.
விலை கிடைப்பதில்லை (Price not available)
ஆனால், வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் 'சிண்டிகேட்' அமைப்பதால், இளநீருக்கு கட்டுபடியான விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென, இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இளநீருக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், வரத்து பெரும் அளவு குறைந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன், பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை தாலுகா பகுதிகளில் இருந்து தினமும், 3 முதல் 3.5 லட்சம் இளநீர், நாடு முழுவதிலும் விற்பனைக்காக அனுப்பப்பட்டது.
வரத்து குறைவு (Low supply)
தற்போது, வரத்து குறைந்து, 2 முதல் 2.5 லட்சம் இளநீர் மட்டுமே அனுப்பப்படுகிறது. இனி கோடை காலத்தில் தினமும், 1.5 லட்சம் அளவுக்கு மட்டுமே வரத்து இருக்கும்.வரத்து குறைந்து, தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது. தற்போது, ஒரு வீரிய ஒட்டு ரக இளநீர் பண்ணையில் வியாபாரிகளுக்கு, 18 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடைகளில் மக்களுக்கு, 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தரகர்களுக்கு லாபம் (Profit for brokers)
விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை, இடைத்தரகர்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கிறது. பல வியாபாரிகள், இடைத்தரகர்கள் 'சிண்டிகேட்' அமைத்து, 16 ரூபாய் வரையில் மட்டுமே விலை கேட்கின்றனர். விவசாயிகள் ஒற்றுமையாக இருந்து, 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...