ஆண்டிபட்டி அருகே ராஜதானி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பருத்தியில் மகசூலை அதிகரிக்க வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்தனர். தேனி மாவட்டத்தில் பாசனம் மற்றும் மானாவாரி பயிராக அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
பருத்தி சாகுபடி (Cotton Cultivation)
வயல்களில் கரைகள் மற்றும் இதர பகுதிகளில் புற்கள், செடிகள் முளைத்து அதன் மூலம் உற்பத்தியாகும் தத்துப்பூச்சி, பச்சை காய்புழு, அந்துப்பூச்சி, பச்சை கூண்வண்டு, இளஞ்சிவப்பு காய்புழு, புருட்டோனியா புழு ஆகிய சேதத்தை ஏற்படுத்தும். இவை பருத்தி செடியில் உள்ள பூ, பிஞ்சு, காய்களையே அதிகம் தாக்கி சேதப்படுத்தும். எனவே விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி இனகவர்ச்சி பொறி, வைரஸ் நுண்ணுயிர் மூலம் புழுக்களை கட்டுப்படுத்தும் முறை மற்றும் வேளாண் துறையினரின் உரிய ஆலோசனைப்படி பூச்சி மருந்துகளை தெளித்து கவனித்து பராமரிக்க வேண்டும்.
இதுகுறித்து வேளாண் துறையினர் கூறியதாவது, ‘கூண்வண்டு, வேர்புழுக்களால் பாதிக்கப்பட்ட பருத்தி செடிகளை உடனடியாக வேருடன் புடுங்கி அப்புறப்படுத்தி நோய் பாதிப்புகளை குறைக்க வேண்டும். பருத்தி செடியிலுள்ள பூச்சிகளின் முட்டைகள், சிறியளவில் வளர்ந்த புழுக்கள், பாதிக்கப்பட்ட பூக்கள், காய்கள், செடிகளை கண்டுபிடித்து அப்புறப்படுத்தியும் நோய் தாக்குதலை குறைக்கலாம். மழைக்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பராமரித்தால் பருத்தி விவசாயத்தில் அதிக லாபம் பெறலாம்’ என்றனர்.
மகசூலை அதிகரிக்க
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுப்புற பகுதிகளில் தங்கி கிராம தங்கல் திட்டத்தில் தங்கிருந்து விவசாயிகளுக்கு அதிக மகசூல் பெரும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டிபட்டி அருகே ராஜதானி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு, முட்டை எண்ணெய் கலவை பயன்படுத்தி பருத்தியில் மகசூலை அதிகரிக்கலாம் என்று விவசாயிகளுக்கு விளக்கி வந்தனர்.
முட்டையில் உள்ள புரதச்சத்தும், கால்சியம் இவை இரண்டும் பருத்தியின் வேர், பூ ஆகியவற்றை தழைக்க செய்து பருத்தியின் மகசூலை அதிகரிக்க செய்யும் என்பதை விவசாயிகளுக்கு பருத்தி தோட்டத்தில் வைத்து நேரடியாக விளக்கினார்கள்.
இதில் வேளாண் கல்லூரி மாணவிகள் சிங்கலட்சுமி, விஜயதுர்கா, சுபாஷினி,யோகேஸ்வரி, சசிரேகா, அனு, சாந்திபிரியா, தேவகி ஆகியோர் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்தனர்.
மேலும் படிக்க
விவசாயிகள் கவனத்திற்கு: விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறும் வழி இதோ!
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி: இனி இந்தக் கவலையே இல்லை!