வேளாண் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள் என்று விவசாயிகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்னணு வேளாண்மையில் தமிழ்நாடு, அகில இந்திய அளவில் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறையினால் கடந்த 2010-ம் ஆண்டில் ஆண்டில் விவசாயிகளுக்கு வேளாண் தகவல் சேவை வழங்குவதற்காக www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தேசிய அளவில் முதன் முறையாக 70 லட்சம் விவசாயிகளின் அடிப்படை தகவல்கள், பண்ணை மற்றும் மண்வளம் சார்ந்த தகவல்கள் வலைதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு, அதற்கான ஆலோசனைகள் மற்றும் வேளாண் இடுபொருட்கள் இந்த துறையினால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை பாராட்டி மத்திய அரசு, 2 முறை தமிழகத்திற்கு தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் தங்க விருதும், ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தது. மேலும் ஸ்கோட்ச் நிறுவனத்தின் உயரிய விருதான பிளாட்டினம் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறையில் மின்னணு தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக வேளாண் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் விவசாயிகளிடம் விரைவில் சென்றடைவதற்காக “உழவன் கைப்பேசி செயலி“ Uzhavan app சேவையை கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள இந்த “உழவன் கைப்பேசி செயலி“ மூலம் விவசாயிகள், வேளாண்மை தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
வேளாண் திட்டங்களின் மானிய விவரங்கள், டிராக்டர், பவர் டில்லர் போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் நிழல் வலைக்குடில், பசுமைக்குடில் போன்ற உயர் மதிப்புள்ள உட்கட்டமைப்புகளை மானியத்தில் பெறுவதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அகில இந்திய அளவில் முதல் முயற்சியாக பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளும், தாங்கள் பயிர் காப்பீடு செய்த விவரங்கள் அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அதே போல் தங்கள் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கடைகளில் விதை மற்றும் உர இருப்பு விவரங்கள், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள அரசு மற்றும் தனியார் மையங்களை தொடர்பு கொள்ளும் வசதி, விளைப் பொருட்களின் சந்தை விலை விவரங்கள், விவசாயிகள் தங்களது பகுதியில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரங்களை அறியும் வசதி மற்றும் வேளாண் விரிவாக்க பணியாளர்கள் வருகை விவரம் போன்ற ஒன்பது வகையான சேவைகளை பெற்று கொள்ளலாம். இந்த “உழவன் கைப்பேசி செயலியினை“கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக விவசாயிகள் தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க
வெங்காய விலை எப்போது குறையும்? - வேளாண்மை பல்கலைக்கழகம் கணிப்பு!!
ரூ.50,000 செலவழித்தும் ரூ.5000க்கும் கூட வழியில்லை! - ஏரியில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்!