கொரோனா தொற்று காரணமாக கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி அங்கக வேளாண் பயிற்சி வகுப்புகள், இம்மாதம் முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், மாதந்தோறும் அங்கக வேளாண் பயிற்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக நேரடி பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆன்லைன்' மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
தற்போது, கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் நேரடி அங்கக வேளாண் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறையின் வாயிலாக, இம்மாதம் முதல் நேரடி தமிழ்வழி அங்கக வேளாண் பயிற்சி நடத்தப்படும்.
இப்பயிற்சியில், இயற்கை முறையில் பயிர் சத்துக்கள் மேலாண்மை, இயற்கை முறையில் களை மேலாண்மை, இயற்கை உரம் மற்றும் அங்கக இடுபொருட்கள் தயாரித்தல், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு, அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்களின் உறுதியளிப்புத் திட்டம் ஆகிய தலைப்புகளில், பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சி கட்டணமாக நாளன்றுக்கு ரூபாய் 590 வசுலிக்கப்படும். பயிற்சி கட்டணத்தை நேரடியாக செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்க, முன்பதிவு அவசியம்.
நேரடி பயிற்சி வகுப்புகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வளங்குன்றா அங்கக வேளாண் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை - 641003 என்ற முகவரி மற்றும் organic@tnau.ac.in என்ற இ-மெயில் மற்றும் 0422 - 6611206, 2455055 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.