இயற்கை விவசாயத்திற்கான மானியம் பெற வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
தோட்டக்கலைத் துறை சார்பில் நடப்பு ஆண்டில் அங்கக வழி வேளாண்மை எனப்படும், இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும் விதமாக தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
அங்கக சான்று (Certificate)
இதில் அங்ககச் சான்று பெறத் தேவையான அனைத்து செலவுகளும், தோட்டக்கலைத் துறை மூலம் மானியமாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், இயற்கை முறையில் சாகுபடி செய்த விளைபொருள்களை விவசாயிகள் சந்தைப்படுத்துவதற்கான அங்கீகாரம் கிடைப்பதுடன், நல்ல லாபம் ஈட்ட முடியும். வெளிநாட்டு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் பெறலாம். எனவே, இயற்கை விவசாயிகள் தனி நபராகவோ, குழுவாகவோ அங்ககச் சான்று பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர இயற்கை முறையில் காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, சாகுபடிக்குத் தேவையான மானிய உதவியும், ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. அங்ககச் சான்று பெறும் விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத் துறை திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.
எனவே, தற்போது இயற்கை முறையில் சாகுபடி மேற்கொண்டு வரும் விவசாயிகளும், இயற்கை சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகளும் தோட்டக் கலைத் துறை மூலம் சாகுபடி மானியம் பெறவும், அங்ககச் சான்று பெறுவதற்கும் தங்களது பெயரை அந்தந்த வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
சொட்டுநீர்ப் பாசனக்குழி அமைக்க ரூ.3000மானியம்- விவசாயிகள் பயன்பெற அழைப்பு!
பிரதமரின் விவசாயிகள் ஓய்வுதியத் திட்டதில் சேர என்ன செய்ய வேண்டும்- வழிமுறைகள் உங்களுக்காக!