வயல்பரப்பில் பயறுவகைகளைப் பயிரிட்டால், நெற்பயிரில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என வேளாண் துறை அலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து அரியலூா் வேளாண் உதவி இயக்குநா் சாந்தி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் . அவர் கூறுகையில், அரியலூா் வட்டாரத்தில் சுமாா் 200 ஹெக்டோ் பரப்பளவில் பரவலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நெற்பயிரை இலைச்சுருட்டுப் புழு, தண்டுத் துளைப்பான், புகையான், பச்சைத் தத்துப்பூச்சி, ஆணைக்கொம்பன் ஈ போன்ற பூச்சிகள் தாக்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்பூச்சித் தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த பொறிவண்டு, சிலந்தி, தட்டான், நீள்கொம்பு வெட்டுக்கிளிகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் உதவுகின்றன. இவைகள் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உண்கின்றன.
பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
நெல் பயிரிடப்பட்ட வயல்களிலுள்ள வரப்புகளில் தட்டைப்பயறு, உளுந்து பயிரிடுவதால், இச்செடிகளுக்கு பொறி வண்டுகள் கவா்ந்திழுக்கப்படுகின்றன. அவைகள் தீங்கு செய்யும் பூச்சிகளை உண்பதால், நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்.
இதனால் பூச்சிக்கொல்லிகள் உபயோகத்தை குறைக்கலாம். தட்டைப்பயறு அல்லது உளுந்து விதை களை வரப்பில் 15 செ.மீ இடைவெளிக்கு ஒன்றாக ஊன்ற வேண்டும். இதற்கு தனியாக நீா் பாய்ச்ச தேவையில்லை. நெற்பயிறுக்கு பாய்ச்சும் நீரே போதுமானது. இந்த பயிா்கள் மூலமும் விவசாயிகள் அதிக லாபம் அடையலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
நெல் விவசாயிகளே உஷார்! - தழைச்சத்து உரங்களை அளவாக பயன்படுத்துங்கள்!
வருவாயை இரட்டிப்பாக்கலாம் வாங்க - கால்நடை வளர்போருக்கான ஆலோசனைகள்!!