விவசாயிகள் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, உயிர் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி மண்வளம் காத்து அதிக மகசூல் பெறவேண்டும் என்று ராமநாதபுரம் உயிர் உர உற்பத்தி மைய வேளாண்மை உதவி இயக்குநர் எம். கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், விவசாயிகள் தேவைக்கு அதிகமான ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், மண்வளம் முற்றிலும் பாதிக்கும் நிலை உள்ளது இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் திரவ உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி, மண்ணின் வளத்தை பாதுகாத்து, நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்ய வேண்டும்.
ராமநாதபுரத்தில் உள்ள வேளாண் மைத் துறையின் உயிர் உற்பத்தி மையத்தில் 2014-ம் ஆண்டு முதல் திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு அசோஸ் பைரில்லம் நெல், அசோஸ் பைரில்லம் இதர பயிர்கள், ரைசோபியம் பயறு, ரைசோபியம் நிலக்கடலை, பாஸ்போ பாக்டீரியா, அசோபாஸ், பொட்டாஷ் மொபலைசிங் பாக்டீரியா போன்ற திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
திரவ உயிர் உரங்களின் அவசியம்
அசோஸ் பைரில்லம், ரைசோபியம் திரவ உயிர் உரங்கள், காற்றிலுள்ள நைட்ரஜன் சத்தை தழைச்சத்தாக மண்ணில் நிலை நிறுத்தி பயிர்களுக்கு அளிக்கிறது.
பாஸ்போ பாக்டீரியா திரவ உயிர் உரங்கள் மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தை கரையும் சத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கிறது. மண்ணின் உயிரியல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. வேர் தூவிகளின் எண்ணிக்கை அதிகரித்து பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும் சக்தியை பெறுகிறது.
விதை முளைப்புத் திறன், பூப்பிடித்தல் மற்றும் முதிர்தல் அதிகரிக்கப்படுகிறது. ரசாயன தழைச்சத்து மற்றும் மணிச்சத்து உரங்களை குறைவாகப் பயன்படுத்தி, சாகுபடி செலவைக் குறைக்கலாம்.
எனவே விவசாயிகள் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, உயிர் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி, மண்வளம் காத்து அதிக மகசூல் பெற்றிடவும், மேலும் விவரங் களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங் களை அணுகி பயன் பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
கிராமங்களில் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் தொடங்க 35% மானியம் மற்றும் ரூ. 25 லட்சம் வரை கடனுதவி!!