அதிக நீர் தேவையின்றி குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய எள் பயிரையும் கோடையில் சாகுபடி செய்யலாம். எள் சாகுபடி செய்ய ஏக்கருக்கு 2 கிலோ விதை அளவே போதுமானதாகும். இதனிடையே, சித்திரை பட்டத்திற்கு ஏற்ற எள் இரகங்கள் குறித்து தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் குறித்து இப்பகுதியில் காணலாம்.
எள் பயிர் அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வளரக் கூடியது. கோடை சாகுபடிக்குத் தேவையான விதைகள் மற்றும் உயிர் உரங்கள் அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் உள்ளன. விவசாயிகள் இதனை 50 சதவிகித மானியத்தில் பெற்றுப் பயன்பெற முடியும்.
சித்திரை பட்டத்திற்கு ஏற்ற எள் இரகம்:
1.எள்- வி ஆர் ஐ -4
- வயது 85-90 நாட்கள்.
- பச்சைப்பூ (Phyllody), வேர் அழுகல் நோயிற்கு மிதமான எதிர்ப்புத் திறனுடையது.
- மகசூல் - 957 கிலோ / ஹெக்டர்
2. எள்-டி எம் வி -7
- வயது 85-90 நாட்கள்.
- வேர் அழுகல் நோயிற்கு எதிர்ப்புத் திறனுடையது.
- மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற இரகம்.
- மகசூல் - 820 கிலோ / ஹெக்டர்.
3.எள்-எஸ் வி பி ஆர்-1
- வயது 75-80 நாட்கள்.
- வெள்ளை நிற விதை உடையது.
- பச்சைப்பூ (Phyllody), இலைபுள்ளி, இலை பிணைக்கும் புழு ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத் திறனுடையது.
- மகசூல் 1115 கிலோ / ஹெக்டர்.
திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் ஆதாரம் உள்ள விவசாயிகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் எள், நிலக்கடலை மற்றும் பயறு வகை சாகுபடி செய்து அதிக இலாபம் பெறலாம். எள் தவிர்த்து இப்பருவத்தில் நிலக்கடலைப் பயிரை நல்ல நீர் ஆதாரம் உள்ள மேட்டுப்பாங்கான நிலங்களில் பயிரிட்டு அதிக இலாபம் ஈட்டலாம்.
கோடை வெயிலின் காரணமாக நிலத்தில் உள்ள ஈரப்பதம் விரைவாக குறைந்திட வாய்ப்புள்ளதால் தேங்காய் மட்டை, நார்களைக் கொண்டு மா, பலா, வாழை, பழ வகைச் செடிகள், மலர் செடிகள் உள்ளிட்ட சாகுபடிப் பயிர்களின் அடிப்பகுதிகளைச் சுற்றிலும் தரையில் பரப்பி வைத்து மூடாக்கு அமைத்திடலாம். மேலும் தேவைக்கேற்ப மலர் செடி, கொடிகள், பழச் செடிகள் ஆகியவற்றிற்கு மேல் தற்காலிக நிழல் வலைகள் அமைத்துக் கொள்வதால் வெயிலின் தாக்கத்தால் மகசூல் குறைவதை விவசாயிகள் தவிர்க்க முடியும்.
குறிப்பாக பழ வகைகள் உள்ளிட்ட எவ்வித பயிர்களைச் சாகுபடி செய்வதாக இருந்தாலும் வறட்சியைத் தாங்கக் கூடிய பயிர்களையே தேர்வு செய்து பயிரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Read also:
கவனத்தை ஈர்த்த ஃபுகோகா- வீட்டுத் தோட்டத்தில் அசத்தும் கல்லூரி பேராசிரியர்
மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா!