Farm Info

Sunday, 20 June 2021 08:29 PM , by: R. Balakrishnan

Credit : Daily Thandhi

உடுமலை பகுதி விவசாயிகளுக்கு வேளாண்துறையினரின் முழுமையான முறையான வழிகாட்டுதல் இருந்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற காய்கறிகள் வீணாகி தெருவில் வீசும் அவலம் இருக்காது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். விவசாயிகள், வேளாண் துறையின் ஆலோசனைகளை கடைபிடிப்பது அவசியம்.

வழிகாட்டுதல் இல்லை

உடுமலை பகுதியில் ஒரு சில விவசாயிகள் வேளாண்துறையினர் வழிகாட்டுதல் மற்றும் உதவியோடு மானியம் பெற்றும், திட்டங்கள், சந்தைப்படுத்துதல், எந்த பயிர்கள் எவ்வளவு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது என்பதை தெரிந்து மாற்றுப்பயிர்களை நடவு செய்து நஷ்டம் ஏற்படாதவாறு வருமானம் ஈட்டி வருகின்றனர். ஆனால் உதவி கிடைக்காத விவசாயிகள் முதலீடு (Invest) போட்டு பொருளை விளைவித்து கூலி கொடுத்து பறித்து, வாகனத்தில் சுமந்து வந்து, சந்தையில் இறக்கி விற்பனைக்கு செய்ய முடியாமல் தக்காளி, பூசணி உள்ளிட்டவற்றை வீதியில் கொட்டப்படும் பரிதாப நிலையே உள்ளது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தில் (Loss) இருந்து மீளமுடியாததால் விவசாயம் அழிவை நோக்கி சென்று கொண்டு உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- விவசாயியையும், விவசாயத்தையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதில் வேளாண்துறையினரின் பங்கு முக்கியமானதாகும். இது களப்பணி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். எழுதப்படிக்க தெரியாத விவசாயிக்கு எந்த ஊரில் எந்தெந்த பயிர்கள் சாகுபடி (Cultivation) செய்யப்படுகிறது என்ற விவரம் தெரியாது.

வீணாகும் காய்கறிகள்

இதனால் ஒரே நேரத்தில் அனைவரும், ஒரே பயிரை ஒரே சமயத்தில் சாகுபடி செய்து விடுகின்றனர். சந்தைக்கு வரும் போது தான் தெரிகிறது பொருளுக்கு விலை இல்லை என்று. இதனால் நஷ்டத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதுபோன்றுதான் பூச்சித்தாக்குதல் (Pest Attack) கையாளும் முறையும். பயிரை பூச்சிகள் தாக்கும் போது தகவல் தெரிவித்தால் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்ட பின்பே அதிகாரிகள் பெயரளவிற்கு பார்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கமாக உள்ளது. அவர்கள் வந்து சென்றதற்காக ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டு பணியை முடித்துக்கொள்கின்றனர். நஷ்ட ஈடோ, நிவாரணமோ பெற்றுத்தருவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. பிரச்சினை பெரிதானால் நாங்கள் தகுந்த நேரத்தில் தக்க அறிவுரை வழங்கினோம் அதை அவர்கள் முறையாக பின்பற்றவில்லை என்று விவசாயிகளின் மீது பழியை போட்டு விடுகின்றனர்.

அதுமட்டுமின்றி கிராமங்கள் தோறும் ஒரு சில விவசாயிகளை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு அரசின் திட்டங்களை வழங்குவது, மானிய (Subsidy) விலையில் பொருட்களை வழங்குவது, ஆலோசனை கூட்டங்களை நடத்துவதென அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனர். இதனால் அந்த வட்டத்தை தாண்டி அரசு அறிவிக்கும் திட்டங்களின் பயன், விழிப்புணர்வு (Awareness) அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைவதில்லை. மக்காச்சோளத்தில் (Maize) படைப்புழு தாக்குதலுக்கு மருந்து தெளித்தபோது இது கண்கூடாக தெரிந்தது. அதுமட்டுமன்றி காய்கறிகள் வீணாவதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்-அப் குழு இயங்குகிறதா? இல்லையா? என்பதும் தெரியவில்லை. இதனால் விவசாயி மற்றும் விவசாயத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

உதவி கிடைக்குமா?

இதற்கு முதல் தீர்வாக வேளாண்துறையினர் பாரபட்சமில்லாமல் விவசாயிகளின் நலன் காப்பதற்கும், திட்டங்கள் குறித்து முழுமையாக அனைவருக்கும் எடுத்துரைப்பதற்கும் முன்வர வேண்டும். அதற்கு அடுத்தபடியாக எந்தெந்த பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது என்பதை களப்பணி மூலமாக கண்டறிந்து மாற்றுப் பயிர்களை நடவு செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். வயல்வெளிகளுக்கு சென்று நோய் தாக்குதலை ஆரம்பத்தில் கண்டறிந்து அதை கட்டுப்படுத்துவதற்கு துணை புரிய வேண்டும். உழவர்சந்தை, தினசரி சந்தை உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்து எந்த பொருளுக்கு நுகர்வு அதிகமாக உள்ளது. தேவை குறைவாக உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு சாகுபடி செய்வதற்கு அறிவுறுத்தலாம். ஒரே நேரத்தில் அனைவரும் ஒரே காய்கறிகளை சாகுபடி செய்வதற்கு பதிலாக மாற்று பயிர்களை நடவு செய்வதற்கு ஊக்குவிக்கலாம். உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கும் தரமான விதைகள்

விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உரக்கடையில் ஆய்வு செய்து விளைச்சல் குறைவதை தவிர்க்கலாம். அத்துடன் நாற்றுப்பண்ணைகளில் ஆய்வு செய்து எந்த நாற்றுகள் எவ்வளவு விற்பனை ஆகிறது என்பதை கண்டறிந்து அது விளைச்சலை அடைந்த பின்பு அதன் தேவை அதிகமாக உள்ள பகுதிகளுக்கு பிரித்து அனுப்புவதற்கு திட்டமிடுதல் வேண்டும். இதனால் விளைபொருட்கள் வீணாவதை தடுக்க இயலும் விவசாயி நஷ்டம் அடையமாட்டார். விவசாயத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச்செல்லலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

தர்பூசணி விற்பனை செய்ய முடியவில்லை: வயலுக்கே உரமாகும் அவல நிலை!

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: தஞ்சை கலெக்டர் பேட்டி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)