விவசாயத்தில் உழவனின் உழைப்பு அளப்பரியது. இரவு பகல் பாராது அயராது உழைத்து, பயிர்களை காத்து, தரமான முறையில் நஞ்சில்லா உணவை (Non-Toxic) உற்பத்தி செய்து வருகிறார்கள் விவசாயிகள். அவர்களின் கடின உழைப்பால் விளைந்த நெல் மணிகளை பாதுகாப்பாக சேமிக்க பல்வேறு வழிமுறைகள் இருப்பினும், சிறப்பான சில வழிமுறைகளை இங்கு காண்போம்.
வீணாகும் நெல் மணிகள்
விவசாயிகளால் கடினமான முறையில் உழைத்து உற்பத்தி செய்யப்பட்ட உணவுதானியங்களை மிக எளிதில் பூச்சிகளும், எலிகளும் (Rat) தின்று சேதப்படுத்தி விடுகின்றன. இவை சேதப்படுத்துவது தானியங்களை மட்டும் அல்ல அரும்பாடு பட்டு உழைத்த உழவர்களின் உழைப்பையும் நேரத்தையும் தான்.
அறுவடைக்கு பின்னர் போதிய பாதுகாப்பில்லாமல் சேமித்து வைக்கப்படும் உணவு தானியங்களைத் தான் இந்த உயிரினங்கள் குறிவைத்து சேதப்படுத்துகின்றன. எனவே, களத்திலிருந்து அறுவடை (Harvest) செய்த தானியங்களை தகுந்த முறையில் சிறப்பான வழிகளில் பாதுகாப்பாக சேமிக்க வேண்டியது நம் தலையாயக் கடமை.
விதை விதைக்கும் போது நாம் செயல்படுவதை விட, விளைந்த நெல் மணிகளை (Paddy) பாதுகாக்கும் முயற்சியில் நாம் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டும். பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அனைத்து விவசாயிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போது தான் உழைப்பின் பலனை முழுவதுமாய்க் காண இயலும்.
அறுவடை செய்யும் நேரம்
நெல்மணிகள் அதிக அளவில் கிடைக்க நெல் அறுவடையை உரியநேரத்தில் செய்ய வேண்டியது அவசியம். நெல் தானியத்தை பொறுத்தமட்டில் நெல் மணியானது 80 சதவீதம் மஞ்சள் நிறமாக (Yellow) இருக்கும் போது அறுவடை செய்யலாம். அப்போது ஈரப்பதம் 19.23 சதவிகிதம் என்ற அளவில் இருக்க வேண்டும். நெல்மணிகளை அதிக சூரிய வெப்பத்தில் (Sun Light) காய வைக்காமல் மிதமான சூரிய வெப்பத்தில் காய வைக்க வேண்டும். காய வைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.
பாதுகாக்கும் வழிமுறைகள்
-
அதிக ஈரத்துடன் காணப்படும் நெல்லை சேமிக்க கூடாது. சரியான நிலையில் இருக்கும் நெல்லை கோணிப்பையில் நிரப்பி, தரை மீது மரச்சட்டங்களை (Wooden frame) அல்லது காய்ந்த வைக்கோல் (Straw) பரப்பி, நெல் மூட்டைகளை அடுக்க வேண்டும்.
-
அதே போல் சுவரிலிருந்து ஓரடி இடைவெளி விட்டு அடுக்க வேண்டும்.
-
ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மிலி மாலத்தியான் (Malathiyan) மருந்தைக்கலந்து தரைப்பகுதி மற்றும் மூட்டைகளின் மீது தெளித்தால், அந்துப்பூச்சி தாக்காமல் இருக்கும்.
-
ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் உள்ள வணிக முறை தரம்பிரிப்பு மையங்களில் நான்கு ரகங்களாக பிரிக்கப்படுகிறது. விவசாயிகள் நெல்லின் தரத்தையும், ஈரப்பதத்தையும் அங்கு தெரிந்து கொள்ள முடியும்.
வீணாகும் நெல்மணிகளின் அளவு:
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களில் பூச்சிகளால் 2.55 சதவீதமும், எலிகளால் 2.5 சதவீதமும், பறவைகளால் 0.85 சதவீதம், ஈரப்பதத்தால் 0.68 சதவீதம், கதிரடிக்கும் இயந்திரங்களால் 1.68 சதவீதம், போக்குவரத்தின் போது 0.15 சதவீதமும் இழப்பு ஏற்படுவதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது. இனியாவது விவசாயிகளின் கடின உழைப்பால் விளையும் நெல் மணிகளை தகுந்த முறையில் பாதுகாத்து விவசாயம் காப்போம்.
ரா.வ. பாலகிருஷ்ணன்
Krishi Jagran
மேலும் படிக்க...
பார்த்தீனியம் செடியில் இருந்து பலவித உரங்கள்- தயாரிப்பது எப்படி?
மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!