விவசாயிகளின் நலனுக்காக அரசின் திட்டப்பலன்களை எளிதில் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள க்ரெய்ன்ஸ் (GRAINS - Grower Online Registration of Agricultural Input System) வலைதளத்தில் விவசாயிகள் தங்கள் அடிப்படைத் தகவல்களை பதிவு செய்ய வேண்டுதல் தொடர்பாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மூன்று முறை வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, சர்க்கரைத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை போன்ற பல்வேறு துறைகளுக்கும் ஒவ்வொரு விதமான ஆவணங்களை தந்து விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.
எனவே, பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசுத்திட்டங்களின் பலன்கள் யாவும் சரியான பயனாளிகளுக்கு எளிதாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு க்ரெய்ன்ஸ் (GRAINS- Grower Online Registration of Agricultural Input System) எனும் வலைதளத்தினை வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறையும், வேளாண்மை-உழவர் நலத்துறையும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையும் இணைந்து உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
க்ரெய்ன்ஸ் வலைதளம் என்றால் என்ன?
விவசாயிகளின் தனிப்பட்ட விபரங்கள், சாகுபடி மேற்கொள்ளும் நில உடைமை விவரங்களை விவசாயிகளிடமிருந்து சேகரித்து, வலைதளத்தில் பதிவேற்றப்படும். விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்த பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, உணவு வழங்கல், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு மற்றும் சர்க்கரை துறை போன்ற 13-க்கும் மேற்பட்ட துறைகள் மூலம்
செயல்படுத்தப்படும் திட்டப் பலன்கள் அனைத்தையும் விவசாயிகள் எளிதில் ஒரே தளத்தில் பெறும் வகையில் "க்ரெய்ன்ஸ்" வலைதளம் ஒற்றை வலைதளமாக (One Stop Solution) செயல்படுத்தப்படும்.
க்ரெயின்ஸ் தளத்தில் யார், யாருடைய விபரங்கள் பதிவேற்றப்படும்?
GRAINS வலைதளத்தில் நில உடைமைதாரர்கள் மற்றும் சாகுபடியாளர்களின் விவரங்கள் விவரங்கள் பதிவேற்றப்படும்.
வலைதளப் பதிவிற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?
ஆதார் அட்டை நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகத்தின் நகல், கைபேசி எண் போன்றவை.
மேலும் படிக்க: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி செய்வதாக அரசு உறுதி
விவசாயிகள் என்னென்ன பலன்களை பெற முடியும்?
1) ஒற்றைச் சாளர (Single Window Portal) வலைதளம் என்பதால், 13 துறைகளின் அனைத்துத் திட்டப் பயன்களுக்கும் விவசாயிகள் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
2) ஒவ்வொரு முறை விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
3) விவசாயிகளே நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் திட்டப்பலன்களை பெற்றுக் கொள்ள இயலும்.
4) நிதி உதவி வழங்கும் திட்டத்தில், ஆதார் எண் அடிப்படையில் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக பணப்பரிமாற்றம் செய்யப்படுவதால் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
5) இவ்வலைதளத்தில் நில உடைமைதாரர்கள் மட்டுமல்லாது
குத்தகைதாரர்கள், சாகுபடியாளர்கள் விவசாயம் செய்யும் நில உடைமை விவரங்களும் சேகரிக்கப்படுவதால், திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி சாகுபடிப் பணியினை மேற்கொள்ளும் அனைத்து பயனாளிகளுக்கும் ஒன்றிய, மாநில அரசின் திட்ட பலன்கள் கிடைக்கும்.
நில உடைமைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை:
திட்டப்பலன்கள் உரிய பயனாளிக்கு சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையில் தான் இவ்வலைதளத்தில் விபரங்கள் யாவும் சேகரிக்கப்படுகின்றன. இதனால், விவசாயிகளின் நில உடைமைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
மேலும் படிக்க: இப்போது உங்கள் WhatsApp கணக்கில் 4 சாதனங்களை இணைக்கலாம்!
வருவாய்த்துறை மூலம் பராமரிக்கப்படும் தமிழ் நிலம் இணையதளத்திலும், நில உரிமை ஆவணத்தின் அடிப்படையில் தான் நில உடைமைதாரர்களின் உரிமை உறுதி செய்யப்படுமே தவிர, GRAINS-ல் இருக்கக்கூடிய விபரப்படி நில உரிமை கோர இயலாது. எனவே, நிலச் சொந்தக்காரர்களான விவசாயிகள் யாரும் க்ரெய்ன்ஸ் வலைதளத்தில் பதிவு செய்வது குறித்து எந்தவிதமான தயக்கமும் கொள்ளத் தேவையில்லை.
எனவே, விவசாயிகள், சாகுபடியாளர்கள் அனைவரும் உடனடியாக உங்கள் கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரிடமோ அல்லது உதவி தோட்டக்கலை அலுவலரிடமோ தொடர்பு கொண்டு, மேற்கூறிய விவரங்களை தந்து, விவசாயிகள் அனைவரும் GRAINS வலைத்தளத்தில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) அரசுச் செயலாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
வேளாண் பட்ஜெட்- வெறும் வாயில் சுட்ட வடையா? கொதித்தெழுந்த அமைச்சர்