தென்கிழக்காசியாவை தாயகமாக கொண்ட மஞ்சள் (Turmeric) நறுமணம் மற்றும் மூலிகைச் செடி. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். உலக அளவில் மஞ்சளின் ஆண்டு உற்பத்தியானது 11 லட்சம் டன்கள். இதில் இந்தியாவின் பங்கு 78 சதவீதம். உலக வர்த்தகத்தில் இந்திய மஞ்சள் இடம் பிடிக்க முக்கிய காரணம் அதிகளவு குர்குமின் (Curcumin) உள்ளது.
மஞ்சளின் வகைகள்:
மஞ்சளில் பல வகைகள் இருந்தாலும் 'ஆலப்புழை மஞ்சள்' உலகளவில் சிறந்ததாக உள்ளது. முகத்திற்கு பூசப்படும் முட்டா மஞ்சள், கஸ்துாரி மஞ்சள், சமையலுக்கு பயன்படுத்தப்படும் விரலி மஞ்சள் ரகங்கள் உள்ளன. இவையும் 7 மாதங்கள், 8 மற்றும் 9 மாதங்களில் அறுவடை (Harvest)
செய்வதற்கேற்ப பிரிக்கப்படுகின்றன.
கோ 1 ரகம் எக்டேருக்கு 30.5 டன்னும் குர்குமின் அளவு 3.2 சதவீதமாகவும் கோ 2 ரகம் எக்டேருக்கு 1.9 டன்னும் குர்குமின் அளவு 4.2 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் பி.எஸ்.ஆர்., 1, 2, ரோமா மற்றும் சுகுணா ரகங்கள் பரவலாக பயிரிடப்படுகின்றன.
பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பி.எஸ்.ஆர் 1 மற்றும் 2 ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பி.எஸ்.ஆர் 1 ரகம் 9 மாத பயிர். இதன் கணுக்கள் குறுகிய இடைவெளியுடன் இருக்கும். ஒரு எக்டேருக்கு 31.2 டன்கள் பச்சை மஞ்சள் கிடைக்கும். பதப்படுத்தி காயவைத்தால் 6 டன் கிடைக்கும்.
பி.எஸ்.ஆர்., 2 ரகம் 240 - 250 நாட்கள் பயிர். செடிகள் நடுத்தர உயரமிருக்கும்.
ரோமா ரகத்தின் வயது 250 நாட்கள். எக்டேருக்கு 20.7 டன் மஞ்சள் கிழங்கு கிடைக்கும். மலைப்பாங்கான நிலம், நன்செய், புன்செய் நிலங்களிலும் பயிரிட ஏற்றது.
சுகுணா ரகம் குறுகிய கால பயிர். 190 நாட்களில் அறுவடையாகும். எக்டேருக்கு 29.3 டன் மஞ்சள் கிடைக்கும். கிழங்குகள் ஆரஞ்சு நிறத்துடன் குர்குமின் அளவு 4.9 சதவீதமாக இருக்கும். கிழங்கு அழுகல் நோய் மற்றும் இலைக் கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் தன்மை உடையது.
- வேல்முருகன் செந்தமிழ்ச்செல்வி
உதவி பேராசிரியர்கள் தோட்டக்கலைக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம்,
கோவை
spices@tnau.ac.in
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!
உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!