மண் பரிசோதனை செய்வதைப் போலவே பாசனநீரின் தன்மையைப் பற்றித் தெரிந்துக் கொள்ள பாசன நீர் பரிசோதனை செய்வது மிக அவசியமாகும்.
பாசனநீர் பரிசோதனையின் தேவை:
நிலம் நல்ல உற்பத்தித் திறன் கொண்ட வளமான மண்ணாக இருந்தாலும், பாசனநீரில் பிரச்சனைகள் இருப்பின் அது நிலத்தின் வளத்தைக் குறைப்பதோடு, காலப்போக்கில் நிலத்தை பயிரிட தகுதியற்ற நிலமாக மாற்றிவிடும். எனவே பாசனநீரை ஆய்வு செய்து அதன் பண்புகளை அறிந்து பிறகு பயன்படுத்துவது சாலச்சிறந்ததாகும்.
பாசனநீர் பிரச்சனைகள்:
பாசனநீரில் முக்கியமாக இரண்டு பிரச்சனைகள் உள்ளன
-
களர் தன்மை
-
உவர் தன்மை
நீரில் உப்பு அதிக அளவில் இருந்தால் உவர் தன்மை உள்ள நீர் என்றும், களர் அதிகம் இருந்தால் களர்தன்மை உள்ள நீர் என்றும் வகைப்படுத்தப்படுகிறது.
பாசனநீரில் கரையும் தன்மையுள்ள கால்சியம் மெக்னீசியம், சோடியம், பை கார்பனேட், மெக்னீசியம் கார்பனேட் உப்புக்கள் அதிக அளவில் இருந்தால் பாசனநீரில் களர்தன்மை ஏற்படுகிறது.
பாசனநீர் ஆய்வுக்கு மாதிரி சேகரிக்கும் முறை:
கிணற்றில் பம்ப் செட் பொருத்தப்பட்டிருந்தால் அரைமணி நேரம் மோட்டரை ஒட வைத்து பின்பு வரும் தண்ணீரில் நீர் மாதிரி சேகரிக்க வேண்டும். சுத்தமான பாட்டியலை அந்தத் தண்ணீரைக் கொண்ட மேலும் சில தடவை கழுவிவிட்டு, சுமார் ஒரு லிட்டர் அளவுக்கு பாசனநீர் மாதிரி சேகரிக்க வேண்டும், மாதிரி சேகரிக்கும் பாட்டில் சுத்தமாகவும் காற்றுக்குமிழ்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். தாமதம் இல்லாமல் உடனே ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்.
பம்ப் செட் இல்லாத கிணறாக இருந்தால் நீர் இறைக்கும் வாளியை வைத்து ஆழத்தில் செல்லும் படியாகச் செய்து ஆழத்திலுள்ள நீரைச் சேகரம் செய்ய வேண்டும். மேல் நீரை சேகரிக்கக் கூடாது. குவலை பொருத்தப்பட்டிருந்தால் ஒரு மணி நேரம் நிரை மட்டத்திலுள்ள இறைத்த பின் மாதிரி எடுக்க வேண்டும்.
பாசன நீர் மாதிரியுடன் அனுப்ப வேண்டிய விவரங்கள்:
-
விவசாயி பெயர்
-
முகவரி/ சர்வே எண்
-
திறந்த வெளி கிணறா (அல்லது) ஆழ்குழாய் கிணறா (அல்லது) ஏரி/ குளம் (அ) ஆற்று நீரா
-
திறந்தவெளி கிணறு (அ) ஆழகுழாய் கிணறாக இருந்தால் அவற்றின் ஆழம்.
தண்ணீர் பாயும் விவரங்களை செய்த பின் கீழ்கண்ட விவரங்களை மேற்கொள்ளவேண்டும்
பாசனநீர் ஆய்வு விவரங்கள்:
-
உவர்நிலை
-
களர் அமில நிலை
-
கார்பனேட்
-
பை-கார்பனேட்
-
குளோரைடு
-
சல்பேட்
-
கால்சியம்
-
மெக்னீசியம்
-
சோடியம்
-
பொட்டாசியம்
-
எஞ்சிய சோடியம் கார்பனேட்
-
சோடியம் ஈர்ப்பு விகிதம்
-
மெக்னீசியம், கால்சியம் விகிதம்
-
நீரின் இரசாயனத்தன்மை
பாசனநீர் பரிந்துரை:
பாசனநீர் மாதிரி ஆய்வு செய்த பின்னர் கடைபிடிக்க வேண்டிய உழவியல் முறைகள் மற்றும் தண்ணீரின் தன்மைக்கேற்றவாறு சாகுபடி செய்ய வேண்டிய பயிர் மற்றும் இட வேண்டிய உரங்கள் நுண்ணூட்டசத்துக்களின் நிர்வாகம் மற்றும் நீர் நிர்வாகம் முதலியவை சிபாரிசு செய்யப்படும்.
நீர் மாதிரி ஆய்வுக்கட்டணம்:
தண்ணீர் மாதிரி ஆய்வு செய்வதற்கு மாதிரி ஒன்றுக்கு பத்து ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள மண்பரிசோதனை நிலையத்தை அணுகி தங்கள் நிலத்தின் மண் மற்றும் பாசனநீர் மாதிரியை ஆய்வு செய்து பயனடைலாம்.
தகவல்
சி.சக்திவேல், இளங்கலை வேளாண்மை மாணவன்
ச.பாலமுருகன். உதவிப்பேராசிரியர் ,
பிரிஸ்ட் பல்கலைக்கழகம்
தஞ்சை