மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு (women self help groups) ரூ.1,084 கோடி கடனுதவிக்கான காசோலைகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி (CM Palanisamy) இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டம் தமிழக மகளிர் குழுக்களுக்கு பேருதவியாக அமையும். பெண்கள் சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடனுதவி:
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (4.2.2021) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 20,186 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1,083.96 கோடி ரூபாய் மற்றும் 317 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 277.79 கோடி ரூபாய், என மொத்தம் 1,361.75 கோடி ரூபாய் வங்கிக் கடன் (Bank Loan) இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக, 7 மகளிர் சுய உதவிக் குழுக்கள் (Women self help group) மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளில் குறைந்த வட்டியில் (Low Interest) கடன் பெறவும், வங்கிகளுடன் வலுவான நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு வருமானம் ஈட்டக்கூடிய பொருளாதாரத் தொழில்களைத் தொடங்கி நடத்திடவும், அதிக அளவு கடன்களைத் தொடர்ச்சியாகப் பெறவும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புத் திட்டம் வழிவகை செய்கிறது. இதன் மூலம் பெண்களின் பொருளாதார ஆற்றல் (Economic energy) மேம்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வங்கிக் கடன் இணைப்பு
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 2019-20ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 13 ஆயிரத்து 301 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, 2020-21ஆம் ஆண்டு 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு இலக்கு (Target) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார். ஆனால், அந்த இலக்கினையும் கடந்து இதுவரையில் 15,653.04 கோடி ரூபாய் வங்கிக்கடன் தொகை 3,82,121 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை, கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட கடன் தொகையினை விட அதிகமானதாகும்.
மேலும், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு 48,737.40 கோடி ரூபாய் கடனுதவியாக (Loan) வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அரசால் 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்திற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 81,582.65 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயிகள், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு!
பனங்கிழங்கு அறுவடை தீவிரம்! பனை மரங்களை காக்க விவசாயிகள் கோரிக்கை!