கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், கள ஆய்வு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது அரசு. ஆய்வுக்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவலை வழங்குமாறூ பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (24.7.2023) அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்,
அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாகவும் மற்றும் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு 20.08.2023 அன்றுடன் விண்ணப்பங்கள் பதியும் பணி நிறைவடைந்தது. இதில் முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 04 ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 35 ஆயிரத்து 925 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில், விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசின் சார்பில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட முகாம்களின் அடிப்படையில் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு விண்ணப்பதாரர்கள் உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு அரசின் சார்பில் வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தடையின்றி செயல்படுத்துவதற்காக 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் அளித்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த தகவல் குடும்பத் தலைவிக்கு தெரிவிக்கப்படும். செல்போனில் செய்தி வந்துவிடும்.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர் போன்ற பல வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பயனாளிகளின் தகுதிகள் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், கள ஆய்வானது அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் காண்க:
WhatsApp-ல் வந்தாச்சு AI ஸ்டிக்கர் வசதி- எப்படி உருவாக்குவது?
மாதம் ரூ.60,000 உதவித்தொகையுடன் 40 பசுமைத் தோழர்கள் தேர்வு- என்ன திட்டம்?