தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள பாசனத்திற்கான மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.15,000/- மானியமாக வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். அதுத்தொடர்பான அறிக்கையில் எவ்விதமான மின் மோட்டார்களுக்கு அரசின் மானியம் கிடைக்கும் என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
விவசாயிகளின் நலனுக்காக மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல் ஆகிய நோக்கத்திற்காக, புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மானியமானது தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
திட்ட விபரம்: பழைய பம்புசெட்டை மாற்றி, புதிய மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணற்றுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மானியம் எவ்வளவு?
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மானியம் பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் விபரம் தெரிவித்து புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்கும் பொழுது அதன் மொத்த தொகையில் 50% அல்லது ரூ.15,000/- இவற்றில் எது குறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
மானியம் பெறுவதற்கான தகுதி என்ன?
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் தங்களது திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்பினாலும், புதிதாக கிணறு அமைத்து, சொந்தமாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளும், இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
இத்திட்டத்தில் 5,000 சிறு குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த சிறு. குறு விவசாயிகளுக்காக 1000 எண்கள் பம்பு செட்டுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அங்கீகாரம் பெற்ற நிறுவன மாடல்களிலிருந்து, தங்களுக்கு விருப்பமான நான்கு ஸ்டார் தரத்திற்குக் குறையாமல் உள்ள மின்மோட்டாரை விவசாயிகள் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், ஏற்கனவே தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் நுண்ணீர்ப் பாசன அமைப்பு நிறுவியுள்ள விவசாயிகள் மற்றும் நுண்ணீர்ப் பாசன அமைப்பு நிறுவிட விருப்பமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர் ஆவார்.
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, அல்லது நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு (MIMIS) என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பித்து. தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு வருவாய் கோட்ட அளவிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்களை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
மானியம் பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள்:
இதுவரை நுண்ணீர்ப் பாசன அமைப்பினை நிறுவிடாத விவசாயிகள் ஆதார் அட்டை சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம். ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராயிருப்பின் சாதிச் சான்றிதழ், சிட்டா, கிணறு விபரத்துடன் கூடிய அடங்கல், மின் இணைப்பு (Service Connection) சான்றிதழ். புதிய மின்மோட்டார் வாங்குவதற்கான உத்தேச விலைப்பட்டியல்/ விலைப்புள்ளி போன்ற ஆவணங்களுடன் உழவன் செயலி மூலமாகவோ அல்லது நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு (MIMIS) இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிக்கலாமே: வேளாண் கருவி மானியத்தில் பெற என்ன செய்ய வேண்டும்?
196 மாடல் பம்புசெட்டுகளுக்கு மானியம்:
அதிக நீர் இறைக்கும் திறன் கொண்ட 4 ஸ்டார் தரத்திற்கு குறைவில்லாத 19 மின் மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் 196 மாடல் மின் பம்புசெட்டுகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் மாடல்களின் விபரங்களை கீழ்க்காணும் லிங்கினை தொடர்வதன் மூலம் அறியலாம். இவற்றிலிருந்து விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களின் மாடல் தேர்வு செய்துகொள்ளலாம்.
பம்புசெட் விவரம் - க்ளிக் செய்க
மேலும் பம்ப்செட் மெக்கானிக்குகள் தங்களிடம் பழுதுநீக்க வரும் விவசாயிகளை புதிதாக பம்ப்செட் வாங்குவதற்கு விருப்பமுள்ளவர்களாக இருந்தால், அவர்களை வருவாய் கோட்ட அளவில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கவும் அமைச்சர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
இதையும் காண்க:
"பட்டினி இல்லாத இந்தியா தான் என் கனவு"- எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்